ஆம்பூரில் அரசுக் கல்லூரி திறக்கப்படுமா?

ஆம்பூரில் அரசு கலைக் கல்லூரி அல்லது அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கடந்த பல ஆண்டுகளாக அனைத்துத் தரப்பு மக்களிடையே இருந்து வருகிறது.

ஆம்பூரில் அரசு கலைக் கல்லூரி அல்லது அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கடந்த பல ஆண்டுகளாக அனைத்துத் தரப்பு மக்களிடையே இருந்து வருகிறது.
 ஆம்பூர் தோல் பொருள்கள், காலணி உற்பத்தி, ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் நகரமாக உள்ளது. அன்னிய செலாவணியை ஈட்டுவதால் ஆம்பூர் நகரம் டாலர் ஏரியா எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க ஆம்பூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியோ,  அரசு கலைக் கல்லூரியோ, தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனமோ இல்லை.
 ஆம்பூர் மற்றும் ஆம்பூரின் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது பிள்ளைகளின் உயர்கல்விக்காக தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது.
குறிப்பாக 10-ஆம் வகுப்புக்குப் பிறகு 11-ஆம் வகுப்பில் சேர்க்க ஆம்பூர் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது மிகவும் வருத்தத்துக்
குரியதாகும்.  
தனியார் பள்ளியில்  12-ஆம் வகுப்பு படித்து முடித்த உடன் தனியார் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும்.  அத்துடன் மட்டுமல்லாமல் அரசு கல்லூரி என்றால் மாவட்டத் தலைநகரான வேலூருக்குத் தான் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் சேர வேண்டுமானாலும் வேலூருக்குத் தான் செல்ல வேண்டும்.
 பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளி, கல்லூரிகளை நாட வேண்டியுள்ளது.
ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி கற்க மகளிர் கல்லூரியில் சேர வேலூர் அல்லது வாணியம்பாடியில் இயங்கும் தனியார் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
 இவ்வாறான நிலையில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது நன்கொடை, கூடுதல் கட்டணங்கள் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது.  அதோடு மட்டுமல்லாமல் நீண்ட தொலைவு பேருந்தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் கால மற்றும் பணம் விரயமாகிறது.
 எனவே பலர் தங்களது பிள்ளைகளை பள்ளி இறுதியாண்டு முடிந்த உடன் உயர்கல்வி கற்க கல்லூரியில் சேர்க்காமல் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் பல மாணவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
தோல் தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தோல் தொழில்நுட்பம் சம்பந்தமான அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டால் தோல் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஆம்பூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பாக இருக்குமென கருதப்படுகிறது.
ஆம்பூர் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி,  அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதனை ஆம்பூர் பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com