கடத்தலில் இது புது விதம்...!

ஆம்பூர் அருகே காரப்பட்டு காப்புக்காடு வழியாக ஆந்திர மாநிலத்துக்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, அங்கிருந்து தமிழகத்துக்கு

ஆம்பூர் அருகே காரப்பட்டு காப்புக்காடு வழியாக ஆந்திர மாநிலத்துக்கு தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, அங்கிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கர்நாடகத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  அதேபோல் ரயில் நிலையங்களிலும் அவ்வப்போது கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர். அதனால் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் சிக்கலை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் நீதிமன்ற தீர்ப்பால் அகற்றப்பட்டுள்ளன.  அதனால் மதுபான பிரியர்கள் ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து மது பாட்டில்களை கடத்துவதும் அதிகரித்து உள்ளது.  இந்த மது பாட்டில்களை கடத்துவோருக்கும் மாநில எல்லையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தடையாக உள்ளன.
அதனால் தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்துவோரும், அண்டை மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு மது பாட்டில் கடத்துவோரும் கண்டுபிடித்த வழி வனப்பகுதி வழி எனக் கூறப்படுகிறது. ஆம்பூர் வனச் சரகத்தில் உள்ள காரப்பட்டு காப்புக்காடுகள் தமிழக எல்லையில் இருந்து ஆந்திர எல்லை 2 அல்லது 3 கி.மீ. என்ற குறைந்த அளவு தொலைவே உள்ளது.  வனப் பகுதியில் நடைபாதைகள் உள்ளதால் இது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு வசதியாக உள்ளது.  பொதுவாக வனத் துறையினர் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு பயந்து காட்டுக்குள் கண்காணிக்கச் செல்வதே இல்லை எனவும், அவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதே இந்த அச்சத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திரத்தில் இருந்து மது பாட்டில்களை தலையில் சுமந்து வந்து கொடுத்துவிட்டு, போகும்போது ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதாகவும் கூறப்படுகிறது. கால்நடையாய் நடந்து செல்ல குறைந்த நேரமே தேவைப்படுவதால் இவர்கள் காரப்பட்டு காப்புக்காடுகளை தங்களது வியாபார தளமாக தேர்ந்தெடுத்து உள்ளதாகத் தெரிகிறது.
 ரேஷன் அரிசி கடத்துவதை மாவட்ட வழங்கல் துறையினர் சரிவர கண்காணிப்பது இல்லை.  அதே போல உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் மாவட்ட தலைமையிடமான வேலூரில் மட்டுமே இருந்து செயல்படுவதால் அவர்களால் மாவட்டம் முழுவதும் நடைபெறும் உணவுப் பொருள் கடத்தலை தடுக்க முடிவதில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால் தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதும், அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவதும் எந்தவித தடுப்பும் இல்லாமல் சுதந்திரமாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 மாவட்டக் காவல் துறையினரும், மாவட்ட வழங்கல் துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரேஷன் அரிசி கடத்துவது, மதுபாட்டில்கள் கடத்தி வருவது போன்ற சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com