அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் ஜோலார்பேட்டை...!

ஜோலார்பேட்டையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் பெரிய ரயில் நிலையம் என்று கூறப்படும் ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு நிலையத்துக்கு தினமும், நூற்றுக்கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இங்கு சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஜோலார்பேட்டையில்  பேருந்து நிலையத்தில், பொது கழிப்பறை இல்லை. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருப்பத்தூர் தொகுதியில் இணைக்கப்பட்டிருந்த ஜோலார்பேட்டை, 2011-இல் தொகுதி மறுசீரமைக்குப் பிறகு,  ஜோலார்பேட்டை தொகுதியாக உருவெடுத்தது.
இத்தொகுதியில் கலந்திரா, சின்னவேப்பம்பட்டு, கேத்தாண்டப்பட்டி, சின்னமோட்டூர், குடியானகுப்பம், மண்டலவாடி, ஏலகிரி மலை, திரியாலம், அச்சமங்கலம், ஆத்தூர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்னைகள் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
தீயணைப்பு நிலையம்...
ஜோலார்பேட்டையில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், திருப்பத்தூர் அல்லது வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனம் வரவேண்டிய சூழல் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் பெருமளவில் சேதம் ஏற்படுகிறது.
துணை மின் நிலையம்...
ஜோலார்பேட்டையில் தனியாக துணை மின் நிலையம் இல்லை. இதனால் இப்பகுதியில் சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. அடிக்கடி மின் அழுத்தம் மாறிமாறி வருவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருள்கள் பழுதடைகின்றன.
கிராமங்களுக்கு
போக்குவரத்து வசதி...
சாலை மற்றும் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேம்பாலம் அமைக்கப்படாததால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும் அருகாமையிலிருக்கும் இடத்துக்குக்கூட பல கி.மீ. சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.
அரசு பொறியியல் கல்லூரி...
மாணவர்கள் உயர்கல்வி கற்க வெளி ஊர்களுக்கு செல்லும் சூழல் உள்ளது. அதிக நன்கொடை செலுத்த வசதியில்லாத பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு சார்பில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
சீரான சாலை வசதி...
பல்வேறு பகுதிகளில் புதிதாக தார்ச் சாலை அமைக்கப்படாமல், மீண்டும் செப்பனிடப்படுவதால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி வருகின்றன.
 குறிப்பாக, ஜோலார்பேட்டையில் இருந்து கோடியூர் செல்லும் சாலை மற்றும் உட்பகுதியிலும் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
தொழிற்பேட்டை...
வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளன.
தொழிற்பேட்டை இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலைக்காக பெங்களூரு, திருப்பூர், சென்னை போன்ற வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com