ஜிஎஸ்டி தாற்காலிக சான்றிதழ்கள்: பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கான தாற்காலிகப் பதிவு சான்றுகள் பதிவிறக்கம் செய்ய ஜிஎஸ்டி இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கான தாற்காலிகப் பதிவு சான்றுகள் பதிவிறக்கம் செய்ய ஜிஎஸ்டி இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில் வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றாக ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை கடைப்பிடிப்பதில் கூடுதல் நேரம், கூடுதல் செலவு போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ள போதிலும் வேறு வழியே இல்லாமல் வணிகர்களும், தொழில்முனைவோரும் அதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜூலை 1}ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி நாடு முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது.  
இதில் 5, 12, 18, 28 சதவீதங்களில் வரி விதிக்கப்படுகிறது.  ஐஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி ஆகிய முறைகளில் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாநில வணிகவரி சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள், மத்திய சேவை வரி, கலால் வரி சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள் ஜிஎஸ்டி சட்டத்தில் தங்களுடைய தகவல்களை பதிவு செய்து, அதற்கான ஆவனங்களை பதிவேற்றம் செய்யும் நடைமுறை ஜிஎஸ்டி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி அவர்கள் தங்களுடைய தகவல்கள் அனைத்தையும் ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.  அவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்தவர்களுக்கு ஜிஎஸ்டி தாற்காலிக பதிவுச் சான்று தற்போது ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதற்காக அவர்கள் ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்களுக்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள உள்ளீட்டு முகவரி, ரகசிய குறியீட்டை பயன்படுத்தி இணையதளத்துக்குள் சென்று "டேஸ்போர்டு' பகுதியில் உள்ள பதிவுச் சான்றை ஜூன் 26-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநில வணிகவரி சட்டம், மத்திய சேவை வரி, கலால் வரி சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்துவிட்டு, இதுவரையில் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் இன்னும் 3 மாதங்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இதுவரை எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்ய விரும்புபவர்களும் ஜிஎஸ்டி இணையதளத்துக்கு சென்று தேவையான தகவல்களை பதிவு செய்தும், தேவையான ஆவனங்களை பதிவேற்றம் செய்தும் தங்களை பதிவு செய்து கொள்ள ஜூன் 25}ஆம் தேதியிலிருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யப்படும் தாற்காலிகப் பதிவு சான்றிதழில் இந்திய அரசு முத்திரை, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு என சம்பந்தப்பட்ட மாநில அரசின் பெயர் சான்றிதழின் தலைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
படிவம் ஜிஎஸ்டி பதிவு}25 என்றும், பதிவெண், பான் அட்டை எண், நிறுவனத்தின் நிர்வாகி பெயர், நிறுவனத்தின் பெயர், ஏற்கெனவே எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது, அதன் பதிவெண், ஏற்றுமதி, இறக்குமதி பதிவெண் இருந்தால் அதனுடைய எண் ஆகிய தகவல்கள் அந்த சான்றிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com