டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நூதனப் போராட்டம்: வட்டாட்சியரின் ஜீப் கண்ணாடி உடைப்பு, போலீஸார் தடியடி

ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மது பாட்டில்களுக்கு பாடை கட்டி நூதனப்

ஆம்பூர் அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மது பாட்டில்களுக்கு பாடை கட்டி நூதனப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது வட்டாட்சியர் ஜீப்பின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலும் ஒரு மதுக் கடை அதே பகுதியில் புதிதாக திறக்கப்பட்டது.  இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அழிஞ்சிகுப்பம் கிராமத்துக்கு மது வாங்க வருகின்றனர். இதனால் அப்பகுதி பெண்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
 கடந்த சில நாள்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை வழியாகச் சென்ற பெண்களை மது அருந்த வந்த நபர்கள் கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும் புதிதாக மற்றொரு டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் பெண்கள் திரண்டு அழிஞ்சிக்குப்பம் கிராம எல்லையிலிருந்து பாடை கட்டி மது பாட்டில்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர், அழிஞ்சிக்குப்பம் பகுதி டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் பத்மநாபன், குடியாத்தம் டிஎஸ்பி பிரகாஷ்பாபு, ஆம்பூர் டிஎஸ்பி தனராஜன், பேர்ணாம்பட்டு, மேல்பட்டி போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கடை முன்பு அமைக்கப்பட்டிருந்த நிழல் கூரை, பெயர் பலகையைப் பிடுங்கி வீசினர். சாலையில் பழைய டயர்களை எரித்தனர். காலி கண்ணாடி பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து வாகனங்கள் செல்லாதவாறு தடையை ஏற்படுத்தினர். மேலும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியரின் ஜீப் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.   
 அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதையடுத்து, போலீஸார் மீது கிராம மக்கள் கற்களையும், பாட்டில்களையும் வீசியதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
 சம்பவம் நடந்த இடத்தை  வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com