தண்டலம் ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற ஆலோசனை

ரசாயனக் கழிவுநீரால் மாசடைந்துள்ள தண்டலம் ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றும் நோக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித் துறை

ரசாயனக் கழிவுநீரால் மாசடைந்துள்ள தண்டலம் ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றும் நோக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் எம்எல்ஏ ஆர்.காந்தி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுநீர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலாறு, தண்டலம், சித்தேரி, புளியந்தாங்கல் ஏரி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட நன்னீர் ஏரிகளில் நேரடியாகக் கலந்து ரசாயனக் கழிவுநீர் தேங்கும் ஏரிகளாக மாறியதால், அப்பகுதியில் நிலத்தடி நீரும், நிலமும் மாசடைந்து வருகின்றன.
 அதேபோல் செட்டித்தாங்கல் ஊராட்சிக்குள்பட்ட தண்டலம் ஏரி சுமார் 145 ஹெக்டேர்(358.15 ஏக்கர்) பரப்பளவு கொண்ட நன்னீர் ஏரியாகும்.
இந்த ஏரியின் கீழ் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் தண்டலம் ஏரியில் நேரடியாகத் தேங்கியதால் மாசடைந்து பயனற்றுப் போனது.
 இந்நிலையில், தண்டலம் ஏரி மாசடைந்து வருவது குறித்து பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையின் பேரில், இந்த ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றும் நோக்கில் எம்எல்ஏ ஆர்.காந்தி மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கலைச்செல்வி மற்றும் பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் சம்பத் ஆகியோருடன் சித்தேரி, தண்டலம் ஆகிய ஏரிகளை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
 அப்போது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக ஏரியில் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், மாசடைந்த ஏரியை தூர்வாரி, தூய்மைப்படுத்தி, நன்னீர் ஏரியாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஏரியைப் பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூன் 10-ஆம் தேதி ராணிப்பேட்டைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com