பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: மாவட்டத்தில் 88.91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

வேலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.91 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 1.42 சதவீதம் கூடுதலாகும்.

வேலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.91 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் 1.42 சதவீதம் கூடுதலாகும்.
வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 352 அரசுப் பள்ளி, 68 உதவி பெறும் பள்ளிகள், 194 தனியார் பள்ளிகளில் இருந்து 26,116 மாணவர்கள், 25,727 மாணவியர் என மொத்தம் 51,843 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இதில், வேலூர் கல்வி மாவட்டத்தில் 12,909 மாணவர்கள், 12,744 மாணவியர் என 25,653 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 13,207 மாணவர்கள், 12,983 மாணவியர் என 26,190 பேரும் அடங்குவர்.
தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில், வேலூர் வருவாய் மாவட்டத்தில் 22,229 மாணவர்கள், 23,863 மாணவியர் என 46,092 பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேர்ச்சி விகிதம் 88.91 சதவீதமாக இருந்தது.
இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 85.12 சதவீதம், மாணவியரின் தேர்ச்சி விகிதம்  92.75 சதவீதம். இதில், வேலூர் கல்வி மாவட்டத்தில் 10,505 மாணவர்கள், 11,674 மாணவியர் என 22,179 பேர் தேர்ச்சியடைந்ததன் மூலம் தேர்ச்சி விகிதம் 86.46 சதவீதமும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 11,724 மாணவர்கள், 12,189 மாணவியர் என 23,913 பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேர்ச்சி விகிதம் 91.31
சதவீதமாகும்.
49 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி: வருவாய் மாவட்டத்தில் உள்ள 614 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வெழுதியதில் 167 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி கண்டுள்ளன.
இதில் 49 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 92.63 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 94.53 சதவீதம், கணிதம் 93.57 சதவீதம், அறிவியல் 98.78 சதவீதம், சமூக அறிவியலில் 96.04 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
வேலூர் வருவாய் மாவட்டத்தில் கணிதப் பாடத்தில் 306 பேரும், அறிவியலில் 206, சமூக அறிவியலில் 764 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 86.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேர்ச்சி விகிதம் 1.42 சதவீதம் அதிகரித்துள்ளது.  
இருப்பினும் மாநில அளவிலான தேர்ச்சியில் வேலூர் மாவட்டம் 31-வது இடத்தையே பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com