சூறைக் காற்றுடன் கனமழை: மரங்கள் சாய்ந்தன

வேலூரில் சனிக்கிழமை மாலை வீசிய பலத்த காற்று காரணமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்தது.

வேலூரில் சனிக்கிழமை மாலை வீசிய பலத்த காற்று காரணமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்தது.
கோடை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்த போதிலும், வேலூரில் அவ்வப்போது இடி, மின்னலுடன் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது. இந்நிலையில், சனிக்கிழமை 106.3 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், மாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்று வீசியது.
இதில் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள போக்குவரத்து சிக்னல் பெயர்ந்து சாலையில் விழுந்தது. அதேபோல, தனியார் வர்த்தக நிறுவனங்களின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கூரைகள் காற்றில் பறந்தன. லேசான மழை பெய்தது.
காட்பாடியில் மழை: காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
ராணிப்பேட்டையில்...
 ராணிப்பேட்டை, திருவலம் அம்மூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 4.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர், சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகரில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்களில் விளம்பரத் தட்டிகளும், கடைகளின் பெயர்ப் பலகைகளும் சாலையில் விழுந்தன. அரக்கோணம் - சோளிங்கர் நெடுஞ்சாலையில் கும்பினிபேட்டை அருகே சாலையோர புளியமரம் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று இயந்திரங்கள் மூலம் மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர்படுத்தினர்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி 8 மணி வரை கன மழைபெய்தது. அதன் பிறகு லேசான தூரல் மழை இடைவிடாமல் பெய்து கொண்டே
யிருந்தது.

சூறைக்காற்றில் சாய்ந்த 100 ஆண்டுகள் பழைமையான மரம்
போளூரை அடுத்த செல்வம்பேட்டையில் சனிக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றில் சாலையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புளிய மரம் அருகில் இருந்த வீட்டின் மீது சாய்ந்தது. போளூர் பகுதியில் சனிக்கிழமை மாலை கடுமையான சூறைக்காற்றுடன், மழை பெய்தது.
அப்போது, வெண்மணி ஊராட்சியைச் சேர்ந்த செல்வம்பேட்டையில் போளூர் - சேத்துப்பட்டு சாலையில் இருந்த 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து, அருகில் இருந்த வீட்டின் கூரை மீது விழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com