டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானங்கள் சூறை: பொதுமக்கள் போராட்டம்

காட்பாடி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கடையை

காட்பாடி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கடையை உடைத்து மதுபானங்களை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காட்பாடியை அடுத்த அறுப்புமேடு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது. பள்ளிக்கூடம், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லுமிடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை டாஸ்மாக் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் டாஸ்மாக் மதுபானக் கடையை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட வந்தனர்.
இதையறிந்த ஊழியர்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றனர். இதையடுத்து கடையின் முன் அமர்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருவாய், காவல்துறை அதிகாரிகள் நீண்டநேரமாகியும் முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மதுபானங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது.  இந்தக் கடையில் மதுபானம் அருந்துவோரால் இப்பகுதி பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளாததால் அப்புறப்படுத்தும் நோக்கில் கடையை உடைத்து மதுபானங்களை வீசி எறிந்தோம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் மதுபானக் கடை செயல்பட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற காட்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com