டாஸ்மாக் கடையை மூடக் கோரி சாலை மறியல்
By DIN | Published on : 11th November 2017 12:47 AM | அ+அ அ- |
திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட இக்கடையை மீண்டும் திறக்க மேற்கத்தியானூர், குமரன் நகர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சில நாள்களுக்கு முன் குமரன் நகரில் மதுக் கடை திறக்கப்பட்டது.
இந்நிலையில், சிலர் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டுச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர் உடைந்து கிடந்த மதுப்பாட்டில்களைக் கண்டு ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை மூடக் கோரி அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.