3 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்பு: இருவர் கைது

குடியாத்தம் அருகே ரூ. 4 கோடிக்கு விற்பதற்காக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஐம்பொன் சாமி சிலைகளை போலீஸார்

குடியாத்தம் அருகே ரூ. 4 கோடிக்கு விற்பதற்காக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஐம்பொன் சாமி சிலைகளை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கல்லுப்பாடி கிராமத்தில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் அறிவழகன் உள்ளிட்ட போலீஸார் மாறுவேடத்தில் கல்லுப்பாடி பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று கண்காணித்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திருலோகசுந்தர் (39), அன்பு (24) ஆகிய இருவரும் ஐம்பொன் சாமி சிலைகளை விவசாய நிலத்தில் புதைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சிலைகள் மறைத்து வைத்திருந்த இடத்தை இருவரும் காட்டினர். பின்னர், 3 அடி உயர விநாயகர், ஒன்றரை அடி உயர முருகன், அரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலைகளை பறிமுதல் செய்தனர். இந்தச் சிலைகளை ரூ. 4 கோடிக்கு விற்பனை செய்ய பேரம் பேசி வந்தது விசாரணையில்
தெரியவந்தது.
பறிமுதல் செய்ய ஐம்பொன்னாலான விநாயகர் சிலை கணியம்பாடி அருகே சோழவரம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி திருடியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் ஊர் மக்களிடம் காண்பித்து இந்தக் கோயில் சிலைதானா என்பதை உறுதிப்படுத்தினார். பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஒரு வாரத்தில் ஒப்படைக்கப்படும் என ஊர் மக்களிடம் அவர் தெரிவித்தார்.
முருகன், அம்மன் சிலைகள் எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்புடைய பழைய குற்றவாளி உள்பட
3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com