தொடர் கனமழை: பாலாற்றில் வெள்ளம்

பாலாற்றை ஒட்டியுள்ள தமிழக-ஆந்திர மாநிலப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பாலாற்றை ஒட்டியுள்ள தமிழக-ஆந்திர மாநிலப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தமிழக-ஆந்திர எல்லையான வாணியம்பாடியை அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 12 அடி உயர தடுப்பணை கட்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கன மழையால் வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றில் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பின.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர், கர்னூல், குப்பம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான காட்டாறுகள், சிறு ஓடைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் தமிழக-ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள விஜிலாபுரம், பெரும்பள்ளம், ராமகுப்பம், வெலதிகாமணிபெண்டா, வீரணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.
மேலும், பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ராஜபுரம், பொகுள்ரே ஆகிய பகுதிகள் வழியாக புதன்கிழமை நள்ளிரவு புல்லூர் தடுப்பணைக்கு நீர் வந்து, தமிழக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக, அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, பெரியபேட்டை வழியாக வாணியம்பாடி நகரம், மேட்டுபாளையம்,  உதயேந்திரம் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ளப் பெருக்கு காரணமாக பாலாற்றில் குளிக்கவோ, இறங்கவோ பொதுமக்களுக்கு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர். இதுபோல, ஆந்திர அரசு சார்பிலும் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி பகுதியில் பாலாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பத்தாபேட்டை ஏரி கரை திடீரென உடைப்பு
வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சி பத்தாபேட்டை பகுதியில் உள்ள ஏரி, தொடர் கன மழையால் நிரம்பியது.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் ஏரியின் ஒரு பகுதியில் உள்ள கரை திடீரென உடைந்தது. இதனால் வெளியேறிய நீர் ஏரியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது. இதில், 10-க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்து ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்றும் பணியிலும், உடைந்த ஏரி கரையை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சுமார் 2 மணிநேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் ஓடியது.
ஆற்காடு 70 அடி எம்ஜிஆர் சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும், நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் செல்கிறது.
பேர்ணாம்பட்டில்...
பேர்ணாம்பட்டு நகரில் குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆந்திர-தமிழக மாநிலங்களின் எல்லையில் உள்ள ரங்கம்பேட்டையில் தொடங்கும் கானாறு நகரின் மையப் பகுதியைக் கடந்து, மதினாப்பல்லி மலட்டாறு வழியாக பாலாற்றில் கலக்கும்.
ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் இந்த கானாற்றில் வியாழக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கானாற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது.
இதனால் ஏரிகுத்திமேடு, முஹம்மதியா வீதி, லால் மசூதி தெரு, தாஹிர் வீதி உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கொல்லபல்லி ஆற்றில்
வெள்ளம் : எம்எல்ஏ ஆய்வு
குடியாத்தத்தை அடுத்த கொல்லபல்லி காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை எம்எல்ஏ ஜி. லோகநாதன் வியாழக்கிழமை பார்வையிட்டார்.
ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொல்லபல்லி காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மேல்கொல்லபல்லி கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ லோகநாதன் அங்கு சென்று எதிர் கரையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தருவதாக அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து, பரதராமியை அடுத்த பூசாரிவலசையில் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடத்தை எம்எல்ஏ லோகநாதன் பார்வையிட்டார். தேங்கியுள்ள மழைநீரை பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டி வெளியேற்ற உத்தரவிட்டார்.
தொடர் மழையால் நிரம்பி வரும் அங்கணாம்பல்லி ஏரியையும் பார்வையிட்டார். இதில், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் வி. ராமு, ஒன்றியச் செயலாளர் டி. சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அனுமதியின்றி நடத்தப்பட்ட படகு சவாரி நிறுத்தம்
ஆம்பூர் அருகே பாலாற்றில் அனுமதியின்றி நடத்தப்பட்ட படகு சவாரியை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
ஆம்பூர் பகுதியிலும், பாலாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலாற்றுக்கு சென்று வெள்ளத்தைப் பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், ஆம்பூர் அருகே மின்னூரில் இருந்து வடகரைக்கு கொப்பரை மூலம் படகு சவாரி நடத்தப்பட்டது. இதில், நபருக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் வட்டாட்சியர் மீராபென் காந்தி, அனுமதியின்றி நடத்தப்பட்ட படகு சவாரியைத் தடுத்து நிறுத்துமாறு வருவாய்த் துறை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.  அதன் பேரில் வருவாய்த் துறையினர் அங்கு சென்று படகு சவாரி நடத்திய கோவிந்தராஜிடம் படகு சவாரி நடத்தக் கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினர்.
அனுமதியின்றி படகு சவாரி நடத்தினால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் வெள்ளப் பெருக்கின் போது படகு சவாரி செய்யக் கூடாது என வருவாய்த் துறையினர் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com