"சர்க்கரை ஆலைக்கு கரும்பை எடுத்துச் செல்ல சாலை வசதி தேவை'

சர்க்கரை ஆலைக்கு கரும்பை எடுத்துச் செல்ல சாலை வசதியில்லாததால் அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சம் டன் கரும்பு

சர்க்கரை ஆலைக்கு கரும்பை எடுத்துச் செல்ல சாலை வசதியில்லாததால் அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சம் டன் கரும்பு தேக்கமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
அரக்கோணம் அருகே திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு அரக்கோணம், நெமிலி ஆகிய இடங்களில் உள்ள கரும்புக் கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் கரும்புகளை அனுப்புகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இப்பகுதிகளில் இருந்து அரக்கோணம் நகரச் சாலை வழியே வாகனங்களில் கரும்பு எடுத்துச் செல்ல வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருத்தணி வழியே சுமார் 40 கி.மீ. சுற்றி, ஆலைக்கு கொண்டு கரும்புகள் செல்லப்படுகின்றன. போக்குவரத்து செலவுகள் அதிகமாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்டிற்கு 3 லட்சம் டன் கரும்பு அரைத்து வந்த திருத்தணி ஆலையில், தற்போது, 1.40 லட்சம் டன் மட்டுமே அரைக்கப்படுகிறது.
நிகழாண்டிற்கான கரும்பு அரவை தொடங்கியுள்ள நிலையில், அரக்கோணம் நகர் வழியே கரும்புகளை ஏற்றிச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், கரும்புகள் வயல்களிலேயே தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து திருவாலங்காடு இடையே உள்ள சாலை, கரும்பு சாலை அபிவிருத்தி திட்டத்தில் போடப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நிதியில் அமைக்கப்பட்ட சாலையில் கரும்பு ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏற்க முடியாது.
இதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அரக்கோணம் நகர் வழியாக கரும்புகளைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com