பாலாற்றில் வெள்ளம்:15 கிராமங்கள் துண்டிப்பு

ஆம்பூர் அருகே தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்துக்கு பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் அருகே தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்துக்கு பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பாலாறு நீர்பிடிப்புப் பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆம்பூரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
பேர்ணாம்பட்டு மலட்டாற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக நரியம்பட்டு தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கிறது.
 இதனால் நரியம்பட்டு பகுதிக்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதேபோல, பாலாற்று வெள்ளமும், மலட்டாற்று வெள்ளமும் ஒன்றாக சேரும் பச்சகுப்பம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் மேல் சுமார் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் செல்கிறது. தரைப்பாலத்தில் உள்ள பாதுகாப்பு கம்பிகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் அதிகமாக செல்வதால், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காகத் தோண்டப்பட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி தரைப்பாலத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.
 வெள்ளப் பெருக்கு காரணமாக பச்சகுப்பம், நரியம்பட்டு தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அழிஞ்சிகுப்பம், ராஜக்கல், எம்.வி.குப்பம், ரெட்டிமாங்குப்பம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம், நரியம்பட்டு வழியாகச் செல்லும் பேருந்துகள் மாதனூர், பேர்ணாம்பட்டு வழியாக குடியாத்தம் சென்று வருகின்றன. இதனால், கிராம மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
மேலும் பாலாற்றின் நீரின் வரத்து அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆம்பூர் அருகே மின்னூர் ஊராட்சியில், குப்பைகளைக் கொட்டுவதற்காக பாலாற்று பகுதிக்கு வியாழக்கிழமை பணியாளர்களுடன் சென்ற மாட்டு வண்டி, வெள்ளத்தில் சிக்கியது. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மாட்டையும், பணியாளர்களையும் மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com