அரக்கோணம் நீதிமன்றத்துக்கு நீதிபதி இல்லாததால் வழக்குகள் தேக்கம்

நீதிபதி இல்லாததால் அரக்கோணம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 700 வழக்குகளும், விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாத 2500-க்கும் மேற்பட்ட வழக்குகளும்

நீதிபதி இல்லாததால் அரக்கோணம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 700 வழக்குகளும், விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படாத 2500-க்கும் மேற்பட்ட வழக்குகளும் தேக்கமடைந்துள்ளதால், உடனடியாக நீதிபதியை நியமிக்க வேண்டும் என அரக்கோணம் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தின் கீழ் அரக்கோணம் நகரம், கிராமியம், நெமிலி காவல் நிலையங்கள், அரக்கோணம் ரயில்வே, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நீதிமன்றத்தில் நடுவராகப் பணியாற்றிய நீதிபதி கடந்த மே மாதம், வருடாந்திர நீதிபதிகள் மாறுதலின் போது வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றார்.
இந்நிலையில் அரக்கோணம் நீதித் துறை நடுவர் மன்ற நீதிபதி பொறுப்பை சோளிங்கர் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கூடுதலாகக் கவனித்து வருகிறார். இதனால் வாரத்துக்கு இரு நாள்கள் அரக்கோணத்துக்கு வந்து சோளிங்கர் நீதிபதி, வழக்குகளை விசாரிக்கின்றார்.
தற்போது, 700-க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணை பாதியில் முடிந்த நிலையில் உள்ளன. மேலும், காவல் நிலையங்களில் பதியப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டிய வழக்குகள் 2500-க்கும் மேல் உள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக, அரக்கோணம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.ரவி, செயலாளர் தமிழ்மாறன், பொருளாளர் அரிபாபு, துணைத் தலைவர் குமரகுரு, துணைச் செயலாளர் குட்டிபாலு ஆகிய நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வேலூர் மாவட்ட (பொறுப்பு) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முரளீதரன், உயர் நீதிமன்றப் பதிவாளர் சக்திவேல், வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்தி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் அமுல்ராஜையும் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத் தலைவர் ஆர்.ரவி, செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் கூறியதாவது:
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் நீதித் துறை நடுவர் நீதிமன்றமே அதிக வழக்குகளைச் சந்திக்கிறது. இந்த நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களாக நீதிபதி நியமிக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. வழக்காடிகள் பலர் தங்களது வழக்குகளின் நிலை தெரியாமல் உள்ளனர். மேலும், காவல் துறையில் பதியப்படும் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாத நிலையில், அந்த வழக்குகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாத சூழலிலும் உள்ளனர்.
எனவே, அரக்கோணம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்துக்கு விரைவில் நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com