பணத்துக்காக மட்டும் வாதாடக் கூடாது: வழக்குரைஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

வழக்குரைஞர்கள் பணத்துக்காக மட்டும் வாதாடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் கேட்டுக் கொண்டார்.

வழக்குரைஞர்கள் பணத்துக்காக மட்டும் வாதாடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் கேட்டுக் கொண்டார்.
வேலூரில் கூடுதல் சார்பு நீதிமன்றம், வாணியம்பாடியில் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், நீதித் துறை நடுவர் நீதிமன்றங்கள் தொடக்க விழா வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய நீதிமன்றங்களைத் தொடங்கி வைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் பேசியதாவது: வழக்குரைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். வாணியம்பாடியில் நிரந்தரக் கட்டடத்தில் நீதிமன்றம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள நீதிமன்றங்களை முன்மாதிரி நீதிமன்றங்களாக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
வேலூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்றங்களை வழக்குரைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்காமல் விரைந்து முடிக்க வழக்குரைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
வழக்கு கொண்டு வரும் கட்சிக்காரர்களின் (வழக்காடிகள்) நோக்கத்தை வழக்குரைஞர்கள் நிறைவேற்ற வேண்டும். பணத்துக்காக வாதாடக் கூடாது.
வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்க நீதிபதிகள் வாய்தா அதிகம் கொடுக்கக் கூடாது என்றார்.
நிகழ்ச்சியில், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.ஆனந்தி வரவேற்றார். வேலூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி.ரவி, வழக்குரைஞர் அசோசியேஷன் தலைவர் பி.தினகரன், மகளிர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.காஞ்சனா அறிவழகன், வாணியம்பாடி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி.எஸ்.காந்தி ஆகியோர் பேசினர்.
இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட எஸ்.பி. பொ.பகலவன், மகளிர் நீதிமன்ற நீதிபதி பி.மதுசூதனன், சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், நீதிபதியுமான சித்தார்த்தர், குடும்ப நல நீதிபதி லதா, சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தாமோதரன், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.ராஜசிம்மவர்மன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com