மாவட்டத்தில் 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், வேளாண் இணை இயக்குநர் வாசுதேவ ரெட்டி, கூட்டுறவுத் துறை இணை இயக்குநர் திருகுண ஐயப்பதுரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால் செப்டம்பர் 18-ஆம் தேதி சர்க்கரை ஆலைகள் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். மேல் அரசம்பட்டு பகுதியில் கானாறு, ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி விட்டது. இதுதொடர்பாக 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 121 மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.
அதேபோல, மேல் அரசம்பட்டு பகுதியில் அதிகளவில் நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும். புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் விவசாயிகள் மாநாடு நடக்கவிருக்கிறது.
இதில், மாவட்டத்தில் இருந்து 100 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:
மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆறு, கானாறு பகுதிகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், பாலாற்றில் மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.
கரும்பு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேல் அரசம்பட்டு பகுதியில் மணல் அள்ள யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. புது தில்லியில் நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க 50 பேரை தேர்வு செய்து மனு அளித்தால் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com