வேலூர்-பெங்களூரு சாலையில் ரூ. 51 கோடியில் ரயில்வே மேம்பாலம்: அதிகாரிகள் ஆய்வு

வேலூர்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ரூ. 51 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவுள்ள பகுதியை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

வேலூர்-பெங்களூரு சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ரூ. 51 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவுள்ள பகுதியை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
வேலூர்-பெங்களூரு சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர, சேண்பாக்கம், கொணவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேலூருக்கு இந்த வழியாகத் தான் வந்து செல்ல வேண்டியுள்ளது.
மேலும், காலை, மாலை வேளைகளில் இப்பகுதி வழியாக ரயில்கள் செல்லும் போது கேட் மூடப்படுவதால் நீண்டதொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரயில்வே மேம்பாலம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதன்படி, முள்ளிப்பாளையம் நிக்கல்சன் கால்வாய் அருகே தொடங்கி, பழைய புறவழிச்சாலை வரையில் 776 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே மேம்பாலமும், இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ செல்லும் வகையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தொடங்கி கால்நடை மருத்துவமனை வரை ரூ. 51 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ள பகுதியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இ.செல்வராஜ், வட்டாட்சியர் பாலாஜி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com