அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றம்
By DIN | Published on : 17th April 2018 01:41 AM | அ+அ அ- |
அரக்கோணம் நகரில் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை வருவாய்த் துறையினர், திங்கள்கிழமை அகற்றினர்.
தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அரக்கோணம் நகரில் பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாக விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, அரக்கோணம் ஜோதி நகர், வட்டாட்சியர் அலுவலகம் அருகில், சுவால்பேட்டை, பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்த விளம்பரப் பதாகைகளை அரக்கோணம் வட்டாட்சியர் பாபு முன்னிலையில், வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை அகற்றினர்.
அப்போது நகர காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிநாராயணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இது குறித்து வட்டாட்சியர் பாபு கூறுகையில், அரசு அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை பொது இடங்களில் வைப்பது தவறு. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. எனவே அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணி நடைபெறும் என்றார்.