ஆம்பூர் வனப்பகுதியில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள்: வனத் துறை நடவடிக்கை எடுக்குமா?

ஆம்பூர் வனச்சரக எல்லைக்கு உள்பட்ட வனப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும்

ஆம்பூர் வனச்சரக எல்லைக்கு உள்பட்ட வனப்பகுதியில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் வனச்சரகத்தில் காரப்பட்டு, மாதகடப்பா, துருகம், ஊட்டல், மாச்சம்பட்டு, ஓணாங்குட்டை, குந்தேலி மூளை, பல்லலக்குப்பம், சங்கராபுரம், தோட்டாளம், குளிதிகை ஜமீன், சாணாங்குப்பம், நாய்க்கனேரி, காமனூர்தட்டு, வெள்ளக்கல் என பல்வேறு காப்புக் காடுகள் உள்ளன.
இக்காப்புக் காடுகளில் மான்கள், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல் ஆகிய விலங்குகளை வேட்டையாடுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இக்காப்புக் காடுகளில் வேட்டையாடி விற்பனை செய்யப்படும் மான்கறி அண்டை மாநிலங்களான ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஆம்பூர் வனச் சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் வேட்டைக்காரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், காடுகளிலேயே தங்கி வேட்டையாடுபவர்களும் உள்ளனர்.
இந்த வனச்சரகத்தில் உள்ள மாதகடப்பா காப்புக்காடுகள், கள்ளச்சாராயம் காய்ச்சுவோரின் கோட்டையாகவே இருந்து வருகிறது. 
இங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான வேல மரப்பட்டைகள் ஆங்காங்கே குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. 
கள்ளச்சாராயம் காய்ச்சுவோரும் வனவிலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி வருவதாக  பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மதுவிலக்கு போலீஸார், காவல் துறையினர், வனத்துறையினர் கூட்டாக இணைந்து மாதகடப்பா காப்புக்காடுகளில் உள்ளே சென்று கள்ளச்சாராயம் அடுப்புகளையும், சாராய ஊறல்களையும் அழித்து, வனவிலங்குகள் வேட்டையாடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஆம்பூர் அருகே உள்ள சாணாங்குப்பம் காப்புக்காடுகள், குளிதிகை ஜமீன் காப்புக்காடுகளிள் அண்மைக் காலங்களில் சமூக விரோதிகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடுவோர் வைத்த தீயைல் காடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. 
இதனால்  இக்காடுகளில் உள்ள மான்களும், காட்டுப்பன்றிகளும் இடம் பெயர்ந்து வருகின்றன. 
அவ்வாறு இடம்பெயர்ந்து வரும் வனவிலங்குகள் ரயில்களிலும்,  ஆறுவழி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிலும் அடிபட்டு உயிரிழக்கின்றன. அவ்வாறு உயிரிழக்கும் வனவிலங்குகள் சாலையோரங்களில் வீசப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 
மேலும், வனவிலங்குகள் நாய்கள் துரத்திக் கடிபட்டு இறந்தாலோ, வாகனங்களில் அடிபட்டு இறந்தாலோ வனத் துறையினர் உடனடியாக அவற்றை மீட்க வேண்டும். முறையாக வனவிலங்குகளை பிரேதப் பரிசோதனை செய்து, பாதுகாப்பான முறையில் எரிக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் வனவிலங்குகள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.
ஆம்பூர் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் நடக்கும் இதுபோன்ற வனக் குற்றங்களை உடனடியாக வனத் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com