இலவச எரிவாயு இணைப்பு: மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

புகையில்லா கிராமங்களை உருவாக்கும் நோக்கில் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் குழு வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

புகையில்லா கிராமங்களை உருவாக்கும் நோக்கில் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் குழு வேலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சமையலுக்கு விறகுகளை பயன்படுத்துவதால் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த புகையால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, புகையில்லா கிராமங்களை உருவாக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 
குறிப்பாக, கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவசமாக எரிவாயு  இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தை வேலூர் மாவட்ட கிராமங்களில் முழுமையாகச் செயல்படுத்துவது குறித்து, மத்திய அரசு குழு சனிக்கிழமை (ஏப்ரல் 14) முதல் மே 5-ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், மத்திய அரசின் கண்காணிப்பு அலுவலர் ஜெயசீலன், இந்திய  அரசின் கால்நடைத் துறை துணைச் செயலாளர் தீபக்சீதி, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம், சிறுகாஞ்சி ஊராட்சிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, அப்துல்லாபுரம் ஊராட்சியில் மொத்தமுள்ள 722  குடும்பங்களில் எரிவாயு இணைப்பு இல்லாத 102 குடும்பங்களிடம் இருந்து இலவச எரிவாயு இணைப்புக்காக மனுக்கள் பெறப்பட்டன. இதேபோல், சிறுகாஞ்சி ஊராட்சியில் மொத்தமுள்ள 256 குடும்பங்களில் எரிவாயு இணைப்பு இல்லாத 76  குடும்பங்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, இந்த மனுக்கள் மீது வரும் 20-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். 
மேலும், ஏற்கெனவே எரிவாயு இணைப்பு வழங்கப்பட்ட குடும்பங்களிலும் எரிவாயு இணைப்புக்கு அரசு வழங்கும் மானியத்தொகை வங்கிக் கணக்குகளில்  முறையாக வந்தடைகிறதா, எரிவாயு உருளைகளை உபயோகிக்க முகவர்கள் முறையான பயிற்சி  அளித்தனரா, பாதுகாப்பு அம்சங்கள் தெளிவு பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். 
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட  வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன வேலூர் மண்ட மேலாளர் ஸ்ரீதர்,  இந்துஸ்தான் பெட்ரோலிய வேலூர் மண்டல மேலாளர் ஜோதீஸ், வேலூர் வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com