சுற்றுலாத் தலமாகிறது காவேரிபாக்கம் ஏரி: ரூ. 1.97 கோடிக்கு கருத்துரு

தமிழகத்திலேயே 3-ஆவது பெரிய ஏரியாக விளங்கும் காவேரிபாக்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்நிரம்பி காணப்படும் காவேரிபாக்கம் ஏரி (கோப்புப் படம்).
நீர்நிரம்பி காணப்படும் காவேரிபாக்கம் ஏரி (கோப்புப் படம்).

தமிழகத்திலேயே 3-ஆவது பெரிய ஏரியாக விளங்கும் காவேரிபாக்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, அந்த ஏரியில் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட வசதிகளைச் செய்ய ரூ. 1.97 கோடிக்கு கருத்துரு தயார் செய்யப்பட்டு மாநில சுற்றுலாத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் உள்ள காவேரிபாக்கம் ஏரியானது தமிழகத்திலேயே 3-ஆவது பெரிய ஏரியாகவும், மாவட்டத்திலேயே பெரிய ஏரியாகவும் உள்ளது. சுமார் 650 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரியானது, சென்னை-பெங்களூர் பிரதான சாலையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 
இதன் மொத்த நீர்ப்பிடிப்பு பரப்பளவு 1,600 ஹெக்டேராகவும், நீர்க் கொள்ளளவு 1,474 மில்லியன் கன அடியாவும் விளங்குகிறது. 
இந்த ஏரியின் மூலம் நேரடியாக 6,200 ஏக்கர் நிலங்களும், அதன் உபரி நீரின் மூலமாக 41 ஏரிகள் நிரம்பி, 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 2005-06, 2015-16, 2017-18 ஆகிய 3 முறை முழுக் கொள்ளளவையும், 2007-08, 2008-09, 2010-11, 2016-17 ஆகிய 4 முறை 75 சதவீத கொள்ளளவையும் எட்டியுள்ளது. 
இந்நிலையில், காவேரிபாக்கம் ஏரியைச் சுற்றி பூங்கா, படகு இல்லம் அமைத்து சுற்றுலாத் தலமாக மாற்றிட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சார்பில் காவேரிபாக்கம் ஏரியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், ரூ.1.97 கோடி மதிப்பில் சுற்றுலாத் தலத்துக்கான வசதிகளைச் செய்வதற்கு கருத்துரு தயாரிக்கப்பட்டது. அதை மாநில சுற்றுலாத் துறை ஆணையருக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பரிந்துரை செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இக்குறைபாட்டைப் போக்க காவேரிபாக்கம் ஏரி பகுதியில் சிறுவர் பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், படகுச் சவாரி, கரைப்பகுதியில் புல்தரை, கரை மேல்பகுதியில் நடைபாதை, பழைய ஆய்வு மாளிகையை செப்பனிட்டு விஐபி அறை, பொதுமக்களுக்கான சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகளைச் செய்ய வேண்டும். 
இதன் மூலம், 10 கி.மீ. சுற்றளவிலுள்ள திருப்பாற்கடல் பெருமாள் கோயில், சோளிங்கர் நரசிம்மர் கோயில், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம், பாலாறு அணைக்கட்டு, காஞ்சி காமாட்சியம்மன் கோயில், கோவிந்தவாடி அகரம் குருகோயில் ஆகியவற்றைக் காணவரும் பொதுமக்களுக்கு காவேரிபாக்கம் ஏரி சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதுடன், அரசுக்கும் வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆண்டிப்பனூருக்கு ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு
வாணியம்பாடி வட்டம், ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் பகுதியிலும் பூங்கா, படகு இல்லம், உணவகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலத்துக்கான வசதிகள் செய்திடவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதை ஏற்று தற்போது சுற்றுலாத் துறை சார்பில் ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இதன் அடிப்படையில், விரைவில் பணிகளை இறுதிசெய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்றும், தொடர்ந்து 6 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கப் பகுதியும் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com