போக்குவரத்துத் துறை அனுமதியுடன் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுமா?

அரக்கோணம் நகரில் போக்குவரத்துத் துறையின் அனுமதியுடன் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்க வேண்டும்

அரக்கோணம் நகரில் போக்குவரத்துத் துறையின் அனுமதியுடன் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
அரக்கோணம் நகரம், தக்கோலம், நெமிலி, காவேரிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக். மற்றும் மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
இப்பள்ளிகளில் மாணவ, மாணவியரை ஏற்றி வர பேருந்துகள், மினி பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 
இந்த வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையினர் சோதனை செய்து, அந்த வாகனங்கள் முறையான அனுமதி பெற்றுள்ளனவா, சரியான உரிமம் பெற்ற ஆட்களால் இயக்கப்படுகிறதா, அவசர வழிகள் வைக்கப்பட்டுள்ளனவா, வாகனங்களில் முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளனவா, வாகனங்களின் பின்புறம் போக்குவரத்துத் துறையினர் தெரிவித்த அறிவிப்புகள் எழுதப்பட்டுள்ளனவா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து சான்றிதழ் அளித்த பிறகே அந்த வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால், தற்போது அரக்கோணம், தக்கோலம், நெமிலி, காவேரிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல பள்ளிகளில் தனியார் வேன்கள் மூலம் மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வது அதிகரித்துள்ளது. 
இந்த வேன்கள் சரியான உரிமம் பெற்ற ஆட்களால் இயக்கப்படாமலும், வாகனங்களில் அவசர வழிகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் இல்லாமலும் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இத்தகைய வாகனங்களில் பணிபுரியும் நபர்களால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. 
அண்மையில், காவேரிபாக்கத்தில் வாகனத்தின் முன் சிறுவன் சென்றதை கவனிக்காமல் ஓட்டுநர் இயக்கியபோது, அச்சிறுவன் வாகனத்தில் சிக்கி உயரிழந்தார்.
பள்ளிக்குச் சொந்தமான வாகனங்களில் மட்டுமே மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு சட்டவிதிகள் கட்டாயப்படுத்தும் நிலையில், அதே பள்ளி மாணவர்களை தனியார் வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்வது குறித்து போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேபோல் அரக்கோணம் நகரில் ஆட்டோக்களில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளை அடைத்துச் செல்வது தொடர்ந்து வருகிறது. 
பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து இருக்க வேண்டும் என்ற விதி உள்ளபோதிலும், தனியார் வாகனங்களில் மாணவர்களை அழைத்துச் செல்வது குறித்து போக்குவரத்துத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை உரிய முறையில் ஆய்வு நடத்தி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com