செம்மரக் கடத்தல்காரரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட செம்மரக் கடத்தல்காரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் வேலூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட செம்மரக் கடத்தல்காரரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் வேலூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.
 வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூரை அடுத்த ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையனின் கோழிப் பண்ணையில் 280 செம்மரக் கட்டைகள் பதுக்கி  வைக்கப்பட்டிருந்தன. இதை பெருமாள் என்பவர் பதுக்கியுள்ளார். இந்நிலையில், காவல் துறை சோதனை எனக்கூறி சிலர் கோழிப்பண்ணைக்குள் கடந்த 2015-ஆம் ஆண்டு நுழைந்து, சின்னபையனை மிரட்டி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 280 செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றனர். 
இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய போலீஸார் நடத்திய விசாரணையில், வேலூர் கலால் டிஎஸ்பியாக அப்போது இருந்த  தங்கவேலு, சின்னபையனின் கோழிப்பண்ணைக்குள் நுழைந்து, செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதற்கு வேலூரைச் சேர்ந்த நாகேந்திரன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, நாகேந்திரனின் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 118 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 கோழிப்பண்ணையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 280 செம்மரக் கட்டைகளில் 162 கட்டைகள் பெங்களூருவைச் சேர்ந்த செம்மரக் கடத்தல்காரர் அமித்கான் (52) என்பவருக்கு ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 
இந்நிலையில், அமித்கான் தலைமறைவானார். கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமித்கான், கடந்த நவம்பர் 29-ஆம் தேதி அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வேலூர் சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். வேலூர் மத்திய சிறையில் இருந்த அமித்கானை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, வேலூர் ஜே.எம்.3-ஆவது நீதிபதி வெற்றிமணி முன்னிலையில், சிபிசிஐடி போலீஸார் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது, டிசம்பர் 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com