161 பயனாளிகளுக்கு ரூ. 12.50 லட்சத்தில் விலையில்லா ஆடுகள்: அமைச்சர் வழங்கினார்

வேலூர் மாவட்டத்தில் 161 பெண்களுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்


வேலூர் மாவட்டத்தில் 161 பெண்களுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
கிராமப்புற பெண்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கால்நடைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்களுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:
விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இதன் தொடர் நிகழ்வாக கணியம்பாடி ஊராட்சியில் 161 பயனாளிகளுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் அனைவருக்கும் விலையில்லா ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல பெண்கள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்ட ஆடுகளை தொடர்ந்து வளர்த்து 50 முதல் 100 ஆடுகளாக பெருக்கி அதன்மூலம் தங்கள் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வருவது இத்திட்டத்தின் வெற்றியாகும்.
கால்நடைத் துறை சார்பில் பொதுமக்களுக்கும் கால்நடை விவசாயிகளுக்கும் 100 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு கடனுதவிகள், கால்நடை தீவன வளர்ப்புக்கு உதவிகள், கால்நடைகளுக்கு மருந்துகள், புதிய கால்நடை மருந்தகங்கள் என தமிழக அரசு தொடர்ந்து திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்ட உதவிகளை கிராமப்புற மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட மருத்துவ நல சங்க உறுப்பினர் எம்.ராகவன், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், கணியம்பாடி கால்நடை உதவி மருத்துவர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com