தைப்பூசம்: சிறப்பு பூஜை, அன்னதானம்

வாலாஜாபேட்டையை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி பீடத்தில் புதன்கிழமை தைப்பூச விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

வாலாஜாபேட்டையை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி பீடத்தில் புதன்கிழமை தைப்பூச விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
நிகழ்ச்சியில், தை மாத பௌர்ணமியையொட்டி, பெண்கள் திருமணத் தடை நீங்க, சுயம்வரகலா பார்வதி யாகம், ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், குழந்தை பாக்கியம் வேண்டி சந்தான கோபால யாகம், நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணெய் சாற்று வைபவம், 27 நட்சத்திர பரிகார ஹோமம், 468 சித்தர்களுக்கு சிறப்பு  பூஜை ஆகியவை  நடைபெற்றன. 
 தைப் பூசத்தையொட்டி, வள்ளலாருக்கு அபிஷேகம், ஹோமம், கஞ்சி கொடுக்கும் வைபவம், கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம், நவகன்னிகளுக்கு குழந்தை வரம்வேண்டி தொட்டில் கட்டும் நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெற்றன. மேலும், சந்திர கிரணத்தை முன்னிட்டு, ஆரோக்கிய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும், மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகமும், கிரகண சாந்தியும் நடைபெற்றன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 

ஆம்பூரில்...
ஆம்பூரில் தைப்பூச விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் சமயவல்லி தாயார் சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பால தண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ஆம்பூர் புறவழிச் சாலையில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் மகா மந்திரம் ஓதுதல், திருப்பள்ளியெழுச்சி, திருவடிபுகழ்ச்சி, திருஅகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல், அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆம்பூர் அருகே பனங்காட்டூரில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தில் வள்ளலாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

குடியாத்தத்தில்...
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வள்ளலார் வழிபாடு யோகா மையம் சார்பில் தைப்பூச விழா புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு யோகா குரு என். வேணுகோபால் தலைமை வகித்தார். கவிஞர் செந்தமிழ்க்கூத்தன் வரவேற்றார். வள்ளலார் கண்ட பக்திநெறி, அன்புநெறி ஆகிய தலைப்புகளில்  கோ. வீரைய்ய பத்தர்,  புலவர் ச. சண்முக செங்கல்வராயன் ஆகியோர்  ஆன்மிக  உரையாற்றினர்.  மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் மா. குணசேகரன், தக்கார் மா. மாதவன், ஆய்வர் அ. மேகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com