மகா சிவராத்திரி விழா: சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு,  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு,  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
 காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ஏகாம்பரநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இக்கோயிலில் முதல் பிரகாரத்தில் உள்ள மணல் லிங்க வடிவிலான மூலவர், சோமாஸ்கந்தர், தபன விநாயகர், பலிபீட நந்தி, திருக்குறிப்புத் தொண்டர், சாக்கிய நாயனார், ஐயடிகள் காடவர்கோன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அகத்தீஸ்வரர், பொல்லாப்பிள்ளையார், ஆயிரம் கால் மண்டப விகட சக்கர விநாயகர், ஆறுமுகர்-வள்ளி-தெய்வானை, ராஜகோபுர விநாயகர்,  நல்லக் கம்பர், கள்ளக் கம்பர், வெள்ளக் கம்பர், மாவடிச் சந்நிதி சோமாஸ்கந்தர், நடராஜர் மண்டபம், 108 லிங்கம், நாயன்மார்கள், தொகை அடியார் உள்பட 75 பேருக்கும், காசி விஸ்வநாதர், சந்தன கணபதி, மார்க்கண்டேஸ்வரர், பைரவர் உள்ளிட்ட 435 கற்சிலைகளுக்கும் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டன. 
பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர், முக்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், ஏகனாம்பேட்டை நவதீஸ்வரர், கூழமந்தல் உத்திர கங்கை கொண்ட சோழீஸ்வரர், திருமற்றிலீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் மகா சிவராத்திரி விழா  நடைபெற்றது.
ஆண்டுக்கொருமுறை திறக்கப்படும் பிறவாதீஸ்வரர் கோயில்...
காஞ்சிபுரத்தில் ஆண்டுக்கொருமுறை பக்தர்களுக்காக திறக்கப்படும் பிறவாதீஸ்வரர் கோயிலில், சிவராத்திரியையொட்டி திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தருகிறார். அப்போது, காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகாது என்று அருள் வரம் தருகிறார். இதையடுத்து, வாமதேவரும், அவ்வாறே பூமியில் பிறப்பெடுத்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும். இதனாலேயே இத்தலம் பிறவாத்தானம் எனப்பட்டது. இக்கோயிலின் கருவறைக்குள் அபூர்வ புவனேஸ்வரராகிய பிறாவதீஸ்வர்ர் அருள்பாலிக்கிறார். இப்பிரசித்தி பெற்ற மணல் கல்சிற்ப கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூஜை செய்வதற்கு மட்டும் அதிகாலை திறக்கப்படும் கோயில் சிவராத்திரியன்று மட்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக இக்கோயில் திறந்து வைக்கப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை பிறவாதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில், காலை முதலே திரளான பக்தர்கள் வருகைபுரிந்து பிறவாதீஸ்வரை சிவாய நாமம் பாடி தரிசனம் பெற்றனர். 
இறவாதீஸ்வரர் கோயிலில்...
அதுபோல், மார்க்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவரின் பேரன் உள்ளிட்டோர் பிரம்மனின் அறிவுறுத்தலின் பேரில், காஞ்சி நகர் வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்தனர் என்பது புராண வரலாறு. இக்கோயிலில் இறவாதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். தொல்லியல்  துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலிலும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு கால பூஜைகள் செய்யப்பட்டன.
 இதுகுறித்து சிவபக்தர்கள் கூறுகையில், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர் கோயில்கள் காஞ்சியில் சிறப்பு வாய்ந்தவை. அவ்வகையில்,  இறவாதீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாள்தோறும் பக்தர்களின் வருகைக்காக திறந்து வைக்கப்படுகிறது. ஆனால், பிறவாதீஸ்வர் கோயில் மட்டும் திறப்பதில்லை. இக்கோயிலுக்கு தொல்லியல் துறை சார்பில் ஆள்கள் நியமிக்கப்பட்டு, நாள்தோறும் திறந்து வைக்க வேண்டும் என்றனர். 

அகோர வீரபத்திர சுவாமி, மல்லிகேஸ்வரர் கோயில்களில்...
சிங்கப்பெருமாள்கோயிலை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள அகோர வீரபத்திர சுவாமி கோயில், மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயில்களில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.    பழைமைவாய்ந்த  அகோர வீரபத்திர சுவாமி கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் மூலவருக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மாலையில் ஜே.லோகேஷ்  குழுவினரின் நாதஸ்வர இசையுடன் அகோர வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெற்றிலைக் காப்பு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை  நடைபெற்றது. விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்தே அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.  இதேபோல் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதோஷ  பூஜை நடைபெற்றன. இதில் சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக-அலங்காரம்,  மகா தீபாராதனை நடைபெற்றது.
 உற்சவ மூர்த்தியான சிவன்பார்வதிக்கு சிறப்பு அபிஷேக - அலங்காரம் நடைபெற்று, நந்தி வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com