"ஆந்திர மாநில நீர்த் திட்டத்தின் மூலம் தமிழகப் பாலாற்றுக்கு தண்ணீர் பெற வேண்டும்'

ஆந்திர மாநில அரசின் "ஹந்திரி நீவா சிரவன சுஜ்ஜாலா' நீர்த் திட்டத்தின் மூலம் தமிழக பாலாற்றுக்கு தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை

ஆந்திர மாநில அரசின் "ஹந்திரி நீவா சிரவன சுஜ்ஜாலா' நீர்த் திட்டத்தின் மூலம் தமிழக பாலாற்றுக்கு தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் கோரிக்கை மனு  அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது: வட தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக 222 கி.மீ நீளத்துக்கு பாலாறு செல்கிறது. 5.50 லட்சம் ஏக்கர் நிலங்களும், ஆயிரக்கணக்கான ஏரிகளும் பாலாற்றை நம்பி உள்ளன. மேலும் நகராட்சிகள், பேரூராட்சிகள், நூற்றுக்கணக்கான ஊராட்சிகள் ஆற்று நீரை நம்பி உள்ளன. 
தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், சர்க்கரை ஆலைகள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள், ரயில்வே சார்பில் குடிநீர் உறிஞ்சு நிறுவனம் ஆகியன உள்ளன. ஜோலார்பேட்டை அருகே ரயில்களுக்கு தண்ணீர் நிரப்ப 2 பெரும் கிணறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இயங்கி வருகிறது. 
கல்பாக்கம் அனுமின் நிலையத்துக்கு பாலாற்று நீர் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு கோடி தென்னை மரங்கள் பாலாற்று படுகைகளில் உள்ளன. கடந்த கால வறட்சியில் வேலூர் மாவட்டத்தில் பல லட்சம் தென்னை மரங்கள் காய்ந்து போய்விட்டன.
இந்நிலையில் பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெரும் பகுதி கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ளன. இரு மாநிலங்கள் கடந்த காலங்களில் தங்களது பகுதிகளில் பாலாற்றிலும், நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பல அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டியதால் தமிழக பாலாற்றுக்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு விட்டது.
தமிழகத்திலும் பல ஆண்டுகளாக மழை பொழிவு குறைந்ததால் பாலாறு வறண்டு வறட்சிக்கு உள்ளாக்கி மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் வந்தது.
தற்போதைய ஆந்திர முதல்வரின் சொந்த தொகுதியான குப்பத்தின் வறட்சி நீங்க 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட திட்டம் தான் "ஹந்திரி நீவா சிரவன சுஜ்ஜாலா'. 
இத்திட்டத்தை மீண்டும் விரைந்து நிறைவேற்ற முடிவு செய்து தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டத்தின்படி கிருஷ்ணா நதிநீரை அதன் உபநதியான ஹந்திரி மூலமாக சித்தூர் மாவட்டத்தில் ஓடும் நீவா நதியோடு (நீவா-தமிழகத்தில் பொன்னையாறு) இணைப்பதாகும். சுமார் 450 கி.மீ நீளமுள்ள இந்த இணைப்புக் கால்வாய் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் நீர் ஏற்றி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பல இடங்களில் மலைக்குகைகள் வெட்டப்பட்டு அதன் மூலம் குப்பம் தொகுதியை வந்தடைகிறது. 
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 3 டிஎம்சி தண்ணீர் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1.5 டிஎம்சி குடிநீருக்காகவும், 1.5 டிஎம்சி நீர் 106 ஏரிகளிலும், பாலாற்றில் கட்டப்பட்டுள்ள 24 தடுப்பணைகளிலும் விவசாயத்துக்காக தேக்கி வைக்கப்பட உள்ளது.  தமிழக முதல்வர், ஆந்திர முதல்வரிடம் கோரிக்கை வைத்து இத்திட்டத்தில் கூடுதல் தண்ணீரை கொண்டு வந்து தமிழக பாலாற்றுக்கு நீர் ஆதாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இது செயல்பாட்டுக்கு வரும்போது வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தென் சென்னை மாவட்ட புறநகர் பகுதியில் வாழும் மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்யலாம்.  
தமிழக முதல்வர் ஆந்திர முதல்வரிடம் கோரிக்கை வைத்து ஒப்பந்தம் போட்டு,மத்திய அரசின் உதவியுடன் முடியும் தருவாயில் உள்ள ஹந்திரி நீவா சிரவன சுஜ்ஜாலா திட்டத்தில் தமிழக பாலாற்றுக்கு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com