காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: கோட்டைக்குள் நுழைந்த இந்து முன்னணியினர் கைது

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கோட்டையில் குவிந்த இந்து முன்னணியினரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கோட்டையில் குவிந்த இந்து முன்னணியினரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அப்போது, போலீஸாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.
ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலக காதலர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், பொது இடங்களில் காதலர்கள் கூடி தங்களது அன்பை பரிமாறிக் கொள்வதுண்டு. ஆனால், காதலர் தினம் என்பது வெளிநாட்டு கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், இதனால் தமிழகத்தின் கலாசாரம் சீரழிவதாகவும் கூறி காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன்படி, காதலர் தினத்தில் பொது இடங்கள், கோயில்களில் கூடும் காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்போவதாக இந்து முன்னணி சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வேலூர் கோட்டையைச் சுற்றி புதன்கிழமை ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோட்டை நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் அமைத்து காதல் ஜோடிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.  இதனிடையே, காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியின் கோட்டத் தலைவர் கோ.மகேஷ் தலைமையில் நிர்வாகிகள் கையில் மாலை, தாலியுடன் கோட்டைக்கு வந்தனர். அவர்கள் கோட்டை  வளாகத்துக்குள் நுழைந்து காதலர்களை தேடிச் சென்றனர். அப்போது, வேலூர் வடக்குக் காவல் ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். 
இதனால், போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. 
இதையடுத்து காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கோஷம் எழுப்பினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com