தனிநபர் கழிப்பறைத் திட்டத்தில் பல கோடி மோசடி: வேலூர் மாவட்ட தணிக்கை ஆய்வில் தகவல்

மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்திலும், வேலையுறுதித் திட்டத்திலும் விதிமுறைகளுக்கு புறம்பாக தொகைகள் அளிக்கப்பட்டதில் வேலூர் மாவட்டம்
தனிநபர் கழிப்பறைத் திட்டத்தில் பல கோடி மோசடி: வேலூர் மாவட்ட தணிக்கை ஆய்வில் தகவல்

மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்திலும், வேலையுறுதித் திட்டத்திலும் விதிமுறைகளுக்கு புறம்பாக தொகைகள் அளிக்கப்பட்டதில் வேலூர் மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 2015-16, 2016-17-ஆம் நிதியாண்டில் அந்த ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றியவர்களிடம் விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ் அளித்துள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட ஒரு குடும்பத்துக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மத்திய அரசு மானியம் அளிக்கிறது. இந்தத் தொகை பயனாளிகளுக்கு நேரடியாகவோ அல்லது அந்தந்த ஊராட்சியிலுள்ள வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவோ மட்டுமே அளிக்க முடியும். ஒப்பந்ததாரருக்கோ, கட்டுமான பொருள்கள் விற்பனையாளருக்கோ அளிக்க இயலாது. 
தவிர, கழிப்பறை கட்டப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மானியத்தொகை இரு பிரிவுகளாக அளிக்கப்படும். பயனாளிகளாக இருந்தாலும் முன்தொகை அளிக்க திட்டத்தில் விதிமுறை வகுக்கப்படவில்லை. இதேபோல், தேசிய வேலையுறுதித் திட்டத்திலும் பயனாளிகளுக்கு முன்தொகைகளும், ஒப்பந்ததாரருக்கும் தொகைகள் அளிக்க இயலாது. 
ஆனால், வேலூர் மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் இந்த திட்டத்தின் விதிமுறைகளை மீறி இந்த இரு திட்டங்களிலும் தொகைகள் அளிக்கப்பட்டதில் கடந்த 2015-16, 2016-17-ஆம் நிதியாண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனுக்கு புகார்கள் வந்தன. 
இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் தணிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் விஜயகுமாரி நெமிலி ஒன்றியத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் முடிவில் இந்த ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் சுமார் ரூ. 51 லட்சமும், தேசிய வேலையுறுதித் திட்டத்தில் ரூ.53.66 லட்சம் அளவுக்கும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இதில், 2015-16, 2016-17-ஆம் நிதியாண்டில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பணியாற்றிய எஸ்.ஜோசப் கென்னடி தனிநபர் கழிப்பறைத் திட்டத்தில் விதிமுறைகளை மீறி ரூ.1.28 கோடி அளவுக்கு முன்தொகையாக வழங்கியதில், ரூ.38.27 லட்சம் அளவுக்கு பணிகள் இதுவரை ஈடு செய்யாததுடன், இந்த தொகைகள் விதிமுறைக்கு புறம்பாக 8 ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதேபோல், வேலையுறுதித் திட்டத்தில் விதிமுறைகளை மீறி ரூ.1.74 கோடி முன்தொகை வழங்கியதில் ரூ.49.35 லட்சம் அளவுக்கு பணிகள் ஈடுசெய்யப்பட வில்லை. இந்த தொகை 14 ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளித்தாங்கிபுரம் ஊராட்சியில் ஏற்கெனவே கூலியாக ரூ.4.23 லட்சம் வழங்கப்பட்ட 54 பயனாளிகளுக்கு கூடுதலாக ரூ.4.23 லட்சம் வழங்கப்பட்டிருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், ஜோசப் கென்னடியைத் தொடர்ந்து நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) பொறுப்பேற்ற கனகராஜ், தனிநபர் கழிப்பறைத் திட்டத்தில் ரூ.12.08 லட்சத்துக்கும், தேசிய வேலையுறுதித் திட்டத்தில் சுமார் ரூ.7 ஆயிரம் அளவுக்கும், அவரை அடுத்து அந்த பொறுப்பில் இருந்த சடையப்பன் தனிநபர் கழிப்பறைத் திட்டத்தில் ரூ.78 ஆயிரம் அளவுக்கும் பணிகளை ஈடுசெய்யவில்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
இதில், ஜோசப்கென்னடி தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவிலும், கனகராஜ் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சடையப்பன் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியாற்றுகின்றனர். இந்த ஆய்வறிக்கையை தணிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் விஜயகுமாரி ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். அதனடிப்படையில், ஜோசப் கென்னடி, கனகராஜ், சடையப்பன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ் அளித்துள்ளார். உரிய விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, ஆய்வு மேற்கொண்ட தணிக்கைப்பிரிவு உதவி இயக்குநர் விஜயகுமாரி கூறியதாவது:
முன்தொகையாக வழங்கப்பட்ட தொகைக்கு இதுவரை பணிகள் ஈடுசெய்யப்படாமல் உள்ளன. திட்டத்தை வேகமாக செயல்படுத்தும் நோக்கத்தில் விதிமுறைகளை மீறி முன்தொகையாகவும், ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 
எனினும், இதுவரை பணிகள் ஈடுசெய்யப்படாமல் உள்ள தொகைகள் குறித்து ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகள் முடிவு செய்வர் என்றார்.
விதிமீறல்...!
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கூறியதாவது
இதனை உடனடியாக ஊழல் என கூறிவிட முடியாது. முன்தொகையாக வழங்கப்பட்ட தொகைக்கு பணிகள் ஈடு செய்யப்படவில்லை. 
எனினும், இந்த திட்டங்களில் முன்தொகை வழங்குவது, ஒப்பந்ததாரருக்கு தொகை அளிப்பது விதிமுறை மீறலாகும். 
அவ்வாறு விதிமுறை மீறி தொகை வழங்கப்பட்டது குறித்து 17 (பி) நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் வராதபட்சத்தில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். நெமிலி ஒன்றியத்தில் நடைபெற்றுள்ள இத்தகைய முறைகேடுபோல் மற்ற ஒன்றியத்தில் நடைபெறவில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com