பொலிவுறு நகரம்: சாலைகளை விரிவாக்கம் செய்ய ஆய்வு

மத்திய அரசின் பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூர் மாநகரிலுள்ள பிரதான சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான

மத்திய அரசின் பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூர் மாநகரிலுள்ள பிரதான சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, முதல்கட்டமாக அச்சாலைகளில் வாகன எண்ணிக்கையை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் மாநகராட்சிப் பட்டியலில் வேலூர் மாநகராட்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு இதுவரை ரூ. 1,415.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, புதிய பேருந்து நிலையம், நேதாஜி மார்க்கெட் அடுக்குமாடி வணிக வளாகம் தரம் உயர்த்துதல், பொழுதுபோக்கு அம்சங்களுடன் பாலாற்றங்கரையை மேம்படுத்தும் பணி, வாகன நிறுத்தம், சீரான சாலை, சிறுவர்களுக்கான பூங்கா உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, பொலிவுறு திட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவுபடுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, பிரதான சாலைகளான அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, காட்பாடி சாலை உள்ளிட்ட சாலைகளில் சென்றுவரும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. 
இதற்காக 45 பேர் கொண்ட குழுவினர் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முக்கியச் சாலைகளில் காணப்படும் வாகன நெரிசல், அதற்கான காரணங்கள் குறித்தும் பதிவு செய்யப்பட்டு நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி 
அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com