மந்தகதியில் பொலிவுறு நகர திட்டப் பணிகள்: வேலூர் மாநகர மக்கள் அதிருப்தி

பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் வேலூர் மாநகராட்சி இணைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாகியும் திட்டப் பணிகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் வேலூர் மாநகராட்சி இணைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாகியும் திட்டப் பணிகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தில் வேலூர் மாநகராட்சியையும் இணைத்து 5 ஆண்டு காலத்துக்குள் ரூ. 1,415.10 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், இத்திட்டத்தில் வேலூரையும் சேர்த்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் பல பணிகள் இதுவரை தொடங்கப்படாமலேயே உள்ளன.
குறிப்பாக, சாலைகள், பேருந்து நிலையங்கள் மேம்பாடு, நெரிசலைத் தவிர்க்க வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கான முதல்கட்டப் பணிகள்கூட இதுவரை நடைபெறவில்லை. திட்டத்துக்காக மத்திய அரசு இதுவரை ஒதுக்கிய நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இதனால் திட்ட காலமான 5 ஆண்டுகளில் பொலிவுறு நகரம் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் எம்.ரவி கூறியதாவது:
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சிக்கு முதல்கட்டமாக ரூ. 219 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 16 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து ரூ. 220.97 கோடி திட்ட மதிப்பில் மாநகராட்சி முழுவதும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், குழாய்கள் என குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 30 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சியில் இரண்டாம் கட்டமாக 28 வார்டுகளில் ரூ. 67.81 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகள் தொடங்கப்படும். மூன்றாம் கட்டமாக காட்பாடி பகுதியில் உள்ள 18 வார்டுகளில் ரூ. 120.21 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கவும், ரூ. 9.47 கோடியில் தானியங்கி மின்னணு கழிப்பறைகள் அமைக்கவும், ஏற்கெனவே உள்ள பொதுக் கழிப்பறைகளை சீரமைக்கவும் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதவிர, ரூ. 996 கோடியில் 12 பணிகளைத் தேர்வு செய்து செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்தின் கீழ் பொலிவுறு சாலைகள், பூங்காக்களை மேம்படுத்தவும், "வைஃபை' உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தங்கள், புதிய பேருந்து நிலையம், காட்பாடி ரயில் நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் பல அடுக்கு கார் நிறுத்தும் இடங்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், நவீன வசதிகளுடன் 2 அடுக்குகளில் நேதாஜி மார்க்கெட்டை மேம்படுத்தவும், பேருந்து நிலையத்துடன் இணைந்தபடி நவீன வசதிகளுடன் வாடகை ஆட்டோ, கார் நிறுத்தும் இடம், நகரம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், காற்று மாசுபாட்டை அறியும் கருவிகள், வானிலை ஆய்வு மையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர, ரூ. 80 கோடி மதிப்பில் 2 அடுக்குகளில் புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், சுற்றுலா நடவடிக்கையாக வேலூர் கோட்டையைச் சுற்றி வசதிகளை மேம்படுத்தவும், சேண்பாக்கம் முதல் சத்துவாச்சாரி வரை பாலாற்றங்கரையில் பூங்கா, நடைமேடை, சைக்கிள் வழித்தடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் த.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
பொலிவுறு நகரம் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த படிப்படியாகவே பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன்படி, முதல்கட்டமாக, குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கடுத்து சாலை வசதி உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்துக்காக உலக வங்கி நிதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. திட்டத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com