திருவள்ளுவர் தின விழாக் கொண்டாட்டம்

திருவள்ளுவர் தின விழா  திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை  கொண்டாடப்பட்டது. 

திருவள்ளுவர் தின விழா  திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை  கொண்டாடப்பட்டது. 

ஆற்காட்டில்...
ஆற்காடு நகர திமுக இலக்கிய அணி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஏ.வி சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, நகர இலக்கிய அணி செயலாளர் ஆ.ப.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  ஆற்காடு எம்எல்ஏ  ஜெ.எல். ஈஸ்வரப்பன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
ஆற்காடு நகர தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் எஸ். ஆர்.ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார். கவிஞர் மா.ஜோதி, செல்வகுகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கோ வாசுதேவன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். 
உலக திருக்குறள் பேரவை சார்பில்  பள்ளி மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமையில்  திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 
இதில், நிர்வாக அறங்காவலர் கு.சரவணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருக்குறள் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், தலைவர் ஆர்.எஸ். ஈஸ்வரப்பன், செயலாளர் தனசேகரன், பொருளாளர் சாமிநாதன், செ.ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை, ஜன. 15: ராணிப்பேட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, சங்கத் தலைவர் புலவர் ஏ.தனபால் தலைமை வகித்தார்.  வழக்குரைஞர் எஸ். அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சங்க ஆலோசகர் கே.ஆர்.சுப்பிரமணி குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் த.தினகரன் வரவேற்றார்.
இதில், ஓய்வு பெற்ற நீதிபதி எ.கிருஷ்ணன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அறிவுத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் ஒய்.அக்பர் ஷரீப், அரசு வழக்குரைஞர் கே.எஸ்.சுரேஷ், ஆற்காடு அறிவுத் திருக்கோயில் துணைத் தலைவர் ஏ.கே.தனபால்,  சங்கத் துணைச் செயலாளர் சி.என்.மணி ராவ் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்...
 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு)  வெ.பெருவழுதி தலைமை வகித்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
பின்னர், பல்கலைக்கழக அலுவலகப் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கினார். 
இதில், பல்கலைக்கழக அலுவலகப் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தத்தில்...
குடியாத்தம் திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பள்ளி நிர்வாகி கே.எம்.ஜி. ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் எம். குணசேகரன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணத்தில்...
அரக்கோணம் சுவால்பேட்டையில் திருவள்ளுவர் மக்கள் நலப் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பேரவையின் தலைவர் டி.கே.ராமன் தலைமை வகித்தார். செயலாளர் ஞா.சாமிதுரை வரவேற்றார். திருவள்ளுவர் உருவப்படத்தை அரக்கோணம் டவுன்ஹால் பொதுச் செயலாளர் எஸ்.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 
உருவப்படத்துக்கு அரக்கோணம் நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் துரை சீனிவாசன் மாலை அணிவித்தார். இதில் ஜி.சுந்தர், எஸ்.வெங்கடேசன், பேரவைப் பொருளாளர் வி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
அரக்கோணத்தை அடுத்த கோணலம் கிராமத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் கிளைத் தலைவர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். இதில், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ் திருவள்ளுவர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். இதில், ஒன்றிய அமைப்புச்  செயலாளர் எஸ்.பார்த்தசாரதி, வினோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
வேலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா திங்கள்கிழமை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம்.  உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  மாட்டுப் பொங்கலையொட்டி, அதிகாலையில் மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அவைகளுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டி வைத்து கொம்புகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு ரிப்பன் கட்டி அலங்கரிக்கப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.  
மாட்டு பொங்கலையொட்டி வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அரியூர் நாராயணி பீடத்தில் கோபூஜை நடத்தப்பட்டது.  
கிராமங்கள் மட்டுமல்லாது, நகரப் பகுதிகளிலும் மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மாவட்டத்தில் 40 இடங்களில் காளை விடும் திருவிழாவுக்கு அனுமதி
வேலூர் மாவட்டத்தில் 40 இடங்களில் காளை விடும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, காளை விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். விழா நடத்த சம்பந்தப்பட்ட விழாக் குழுவினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான ஆய்வு நடத்தப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அனுமதி வழங்கப்படும். அதன்படி வேலூர் மாவட்டத்தில் காளை விடும் திருவிழாவை 40 இடங்களில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஜனவரி 17) தொடங்கி 31-ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காளை விடும் திருவிழா நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com