உண்ணிகள் தாக்குதலால் உயிரிழக்கும் கால்நடைகள்: வேலூர் மாவட்ட விவசாயிகள் கலக்கம்

வேலூர் மாவட்டத்தில் உண்ணிகள் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உண்ணிகள் தாக்குதலால் கால்நடைகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், பேர்ணாம்பட்டு,  வாணியம்பாடி, மாதனூர், குடியாத்தம், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் மாடுகள் வளர்ப்போர் அதிகம் உள்ளனர். இப்பகுதிகளில் பசுமாடுகள், ஏர் உழவு மாடுகள்,  வண்டி மாடுகள் உள்ளிட்ட மாடுகளை அண்மைக்காலமாக உண்ணிகளின் தாக்கி வருகின்றன. கால்நடைகள் மீது பரவி கிடக்கும் இந்த உண்ணிகளால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மாடுகள் அதிகம் இறப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த உண்ணிகள் கால்நடைகளைத் தாக்கும் ஒருவிதமான புற ஒட்டுண்ணிகளாகும். 
இந்த ஒட்டுண்ணிகள் கால்நடைகளின் நலம், உற்பத்தி, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும்,  இவை கால்நடைகளின் தோலின் மேல் ஒட்டி வாழ்ந்து, தேவையான உணவை ரத்தத்தை உறிஞ்சுவதன் மூலம் எடுத்துக்கொள்கின்றன. 
இந்த உண்ணிகளால் கால்நடைகளில் பால் உற்பத்தி மற்றும் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், பலவிதமான நோய்க் கிருமிகளைப் பரப்புவதிலும் பெரும் பங்கு வகிப்பதாகவும் கால்நடை வளர்ப்போர் கூறுகின்றனர்.
இந்த உண்ணிகள் கால்நடைகளின் உடலில் பரவலாகக் காணப்பட்டாலும், அவை காது, அடிவயிறு, கால் விரல், பின்புற பகுதிகள் மற்றும் வால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டமாகக் காணப்படுகிறது.
 நூற்றுக்கணக்கான உண்ணிகள் கால்நடைகளைக் கடித்து ரத்தம் உறிஞ்சுவதால் கால்நடைகளுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் கால்நடைகள் எடை குறைந்தும், வளர்ச்சி குன்றியும் காணப்படுகிறது. சில நேரங்களில் அதிக அளவில் உண்ணிகளினால் பாதிப்புக்கு உள்ளாகும்போது இறப்பும் நேரிடுவதாக கால்நடை வளர்ப்போர் கூறுகின்றனர்.
மேலும், உண்ணிகள் கால்நடைகளைக் கடிப்பதால் கால்நடைகளுக்குப் பெரும் உறுத்தல் ஏற்படுகிறது. இதனால் அவை மேய்ச்சல், தீவனம் உட்கொள்வதில் கவனம் செலுத்தாமல் போகின்றன.
உண்ணிகள் கால்நடைகளைக் கடிக்கும்போது, உண்ணிகளின் உமிழ்நீரில் உள்ள நச்சுகள் கால்நடைகளின் நலன் மற்றும் உற்பத்தித் திறனைப் பாதிக்கின்றன. 
உண்ணிகள் கால்நடைகளைக் கடிக்கும் போது அவற்றின் வாய்ப்பகுதிகள், தோலைக் காயப்படுத்துகின்றன. அவை கால்நடைகளை விட்டு வெளியேறும்போது கடித்த இடத்தில் காயம் உண்டாகிப் புண்கள் ஏற்படுகின்றன. மேலும், இந்தக் காயங்கள் மூலம் கிருமிகள் உடலினுள் சென்று பல உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கின்றன. உண்ணிகளால் ஏற்படும் காயங்களை ஈக்களைக் கவர்ந்து ஈர்ப்பதனால் கால்நடைகளில் ஈப்புழு நோய் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த உண்ணிகளிடம் இருந்து கால்நடைகளைக் காப்பாற்ற மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஊசிகள் மூலம் மருந்து செலுத்தியும், மருந்து பவுடர்கள், மூலிகை திரவியங்கள் பூசியும் உண்ணிகள் கால்நடைகளை விட்டு வெளியேறுவது இல்லை. இதனால் கால்நடைகள் வளர்ப்போர் பெரும் அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர். 
பசுமாடுகள் மற்றும் வண்டி எருதுகளின் விலை ரூ. 40,000 தொடங்கி ரூ. 1.50 லட்சம் வரை உள்ளது. கால்நடைகளின் மீதான இந்த உண்ணிகளின் நோய் தாக்குதலால், மாட்டுச் சந்தைகளில் கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு கால்நடை வளர்ப்போர் தள்ளப்பட்டுள்ளனர். 
எனவே, கால்நடைகளைத் தாக்கும் உண்ணிகளால் ஏற்படும் தாக்குதலைத் தடுக்க கால்நடைத் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com