அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு வருவாய்க் கோட்டம் அமைக்கப்படுமா?

பல்வேறு கோரிக்கைகளுக்காக வருவாய் கோட்டாட்சியரைச் சந்திக்க ராணிப்பேட்டைக்கு சென்றுவரும் நிலையில், அரக்கோணத்தைத்

பல்வேறு கோரிக்கைகளுக்காக வருவாய் கோட்டாட்சியரைச் சந்திக்க ராணிப்பேட்டைக்கு சென்றுவரும் நிலையில், அரக்கோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய்க் கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நகரங்களில் சென்னையின் புறநகராக விளங்குவது அரக்கோணம். பல்வேறு துறைகளுக்கு அரக்கோணம் தலைமையிடமாக உள்ளது. தமிழக அரசின் பதிவுத் துறையில் அரக்கோணம் கோட்டம், மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிர்வாகத்தில் அரக்கோணம் மாவட்டம், தமிழ்நாடு மின்வாரியத்தில் அரக்கோணம் கோட்டம், மத்திய அரசின் அஞ்சல் துறையில் அரக்கோணம் கோட்டம், தமிழக அரசின் கல்வித் துறையில் அரக்கோணம் கல்வி மாவட்டம் என பல்வேறு துறைகளுக்கு தலைமையிடமாக இருக்கும் அரக்கோணத்தை வருவாய்த் துறையிலும் கோட்டத் தலைமையிடமாகக் கொண்டு வரவேண்டும் என அரக்கோணம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வருவாய்த் துறையில் அரக்கோணம், நெமிலி ஆகிய இரு வட்டங்கள் உள்ளன. அரக்கோணம் வட்டத்தில் அரக்கோணம் தெற்கு, அரக்கோணம் வடக்கு, பாராஞ்சி, பள்ளூர் ஆகிய 4 உள்வட்டங்களும், நெமிலி வட்டத்தில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிபாக்கம் ஆகிய 4 உள்வட்டங்களும் உள்ளன. இந்த இரு வட்டங்களில் மட்டும் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்க அரக்கோணம் நகரம், கிராமியம், பாணாவரம், காவேரிபாக்கம், அவளூர், நெமிலி, தக்கோலம் என 7 காவல் நிலையங்கள் உள்ளன.
திருமணமான 7 ஆண்டுகளில் மர்மமான முறையில் கணவனோ, மனைவியோ இறந்தால், அதுதொடர்பாக கோட்டாட்சியர் மட்டுமே நேரில் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக கோட்டாட்சியர் ராணிப்பேட்டையில் இருந்து அரக்கோணம் வர குறைந்தது 2 மணிநேரம் ஆகும். மேலும், அவர் ஆற்காடு மற்றும் ஆற்காடு கிராமியப் பகுதிகளில் இருந்தால் அதை முடித்துவிட்டு, அரக்கோணம் வர அரை நாள் ஆகிறது. இதனால், வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
நகரில் அவ்வபோது ஏற்படும் சட்டம் -ஒழுங்கு பிரச்னைகளான இரு தரப்பு தகராறு, கோயில் தகராறு, கிராமங்களிடையே தகராறு ஆகியவற்றில் காவல் துறையினர் விசாரணை நிறைவு பெற்றும், பிரச்னை தீரவில்லையென்றால் கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்படும். இதற்காக பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு தரப்புமே ஒவ்வொரு தரப்பிலும் குறைந்தது 25 பேர், கோட்டாட்சியர் அழைக்கும் அனைத்து நாள்களும் ராணிப்பேட்டைக்குச் செல்ல வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுவதோடு, பணச் செலவு விரயமும் ஏற்படுகிறது.
அரக்கோணம், நெமிலி ஆகிய இரு வட்டங்களில் பிறப்பு, இறப்புகள் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால் அதை மீண்டும் பதிவு செய்ய கோட்டாட்சியரிடம் மட்டுமே மனு அளிக்க வேண்டும். நிலஉடமை குறித்த விவரங்களில் திருத்தம், வீடு, மனை, நிலம் ஆகியவற்றின் அளவீடுகள் தவறாக இருந்தாலும் அதைத் திருத்த கோட்டாட்சியரிடம் தான் செல்ல வேண்டும். அரக்கோணம் மற்றும் நெமிலியில் இருக்கும் கிராமங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் பற்றிய பணி முறைகேடுகள் குறித்து தெரிவிக்க கோட்டாட்சியரிடம்  தான் மனு அளிக்க வேண்டும்.
அரக்கோணம் மற்றும் நெமிலியில் இருந்து ராணிப்பேட்டை 55 கி.மீ. தூரத்தில் உள்ள நிலையில் கோட்டாட்சியரும், அடிக்கடி அரக்கோணம் மற்றும் நெமிலிக்கு வர இயலவில்லை. பொதுமக்களும் அவரைச் சந்திக்க அவ்வளவு தூரம் பயணிக்க முடியவில்லை. இதற்காக அரக்கோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவையில் இருமுறை எடுத்துரைத்தார். 
தொடர்ந்து இந்தக் கோரிக்கையை வருவாய்த் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். இதை ஏற்ற முதல்வர், வேலூருக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்தபோது அரக்கோணம் வருவாய் கோட்டம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
 ஆனால் தற்போது வரை அதற்காக அறிவிப்பு வராத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவையில் பேசிய எம்எல்ஏ சு.ரவி மீண்டும் ஒருமுறை இக்கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். 
எனவே, தமிழக அரசு பரிசீலித்து அரக்கோணம் வருவாய்க் கோட்டத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரக்கோணம், நெமிலி வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com