சீருடை, காலணி, புத்தகப் பைகளை கட்டாயமாக வாங்க வற்புறுத்தும் தனியார் பள்ளிகள்

அரக்கோணம் நகரில் தனியார் பள்ளிகள் தங்களது மாணவ, மாணவிகள் சீருடை, காலணி, புத்தகப் பை, சாப்பாட்டுப் பை, நோட்டுகள்

அரக்கோணம் நகரில் தனியார் பள்ளிகள் தங்களது மாணவ, மாணவிகள் சீருடை, காலணி, புத்தகப் பை, சாப்பாட்டுப் பை, நோட்டுகள் ஆகியவற்றை பள்ளிகளின் தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
அரக்கோணம் பகுதியில் மட்டும் மேல்நிலை வரையிலான தனியார் கல்வி நிறுவனங்கள் 12-க்கும் மேல் உள்ளன. இதில், ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது ஆயிரம் மாணவர்களுக்கு மேல் படித்து வருகின்றனர். சில பள்ளிகளில் 2 ஆயிரம் அல்லது 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 3,500-க்கும் மேல் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த காலங்களில் புத்தகங்களை மட்டுமே தங்களது மாணவர்களுக்கு விற்று வந்த தனியார் கல்வி நிறுவனங்கள், இந்த ஆண்டு முதல் சீருடை, காலணிகள் (ஷூ), புத்தகப் பைகள், சாப்பாட்டுப் பைகள், நோட்டுகள், புத்தகங்கள் என அனைத்தையும் தங்களிடமே வாங்க வேண்டும் என பெற்றோரை கட்டாயப்படுத்துகின்றன. 
அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வெளிச்சந்தைகளில் விற்கப்படும் விலையை விட கூடுதல் விலைக்கு இவை விற்கப்படுவதாக பெற்றோர் கூறுகின்றனர்.  தாங்கள் வெளியில் வாங்கிக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தால், உடனே மாற்றுச் சான்றிதழ் தருகிறோம், பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என மிரட்டல் தொனியில் கூறுகின்றனர். குறிப்பாக, மாணவர்களின் பெற்றோர்களை பள்ளியின் தாளாளரோ, முதல்வரோ, ஆசிரியர்களோ சந்திக்க மறுக்கின்றனர். 
இந்த விற்பனைக்கென தனியார் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதால், அவர் பெற்றோரின் கோரிக்கையை சிறிதளவு கூட ஏற்க மறுப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், தொடக்க நிலை வகுப்புகளில் அரசின் 25 சதவீத திட்டத்தில் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோரை குறிப்பிட்ட நாள்களுக்குள் இவற்றை வாங்கவில்லையெனில், தங்களது பிள்ளை பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவார் என மிரட்டுவதாகவும் பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு ஒரே சீருடை தரப்படுவது சரியாக இருக்கலாம். ஆனால் ஒரே புத்தகப் பை, சாப்பாட்டுப் பை கொடுப்பதால், முன்தொடக்க நிலை, தொடக்கநிலை மற்றும் இடைநிலை மாணவ, மாணவிகள் தங்களது பையைக் கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர். 
மேலும், அரக்கோணம் நகரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வரும் பெற்றோருக்கு மரியாதை தராமல் அவர்களை மதில் சுவருக்கு வெளியே நிற்கவைத்து பாதுகாவலருடன் மட்டும் பேசவைத்து திருப்பி அனுப்புகின்றனர்.
இதுகுறித்து அரக்கோணத்தில் ஜவுளி, காலணிகள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை விற்கும் கடை உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் வணிகவரித் துறை அங்கீகாரம் பெற்று, ஜிஎஸ்டி செலுத்தி பொருள்களை விற்பனை செய்து வருகிறோம். ஆனால் பள்ளி நிறுவனத்தார், வணிகவரித் துறை அங்கீகாரம் இல்லாமல் சீருடைகள், காலணி, புத்தகப் பை, சாப்பாட்டுப் பை ஆகியவற்றை அதிக விலைக்கு விற்கின்றனர். இதற்கு ரசீதும் வெள்ளைக் காகிதத்தில் தருகின்றனர். அவர்களிடம் வணிக
வரித் துறை டேன் (பஅச) எண் இல்லை. ஜிஎஸ்டி கட்டுவது கிடையாது. ஆக அரசுக்கு வரியே செலுத்தாமல் பெருந்தொகையை லாபமாகப் பார்க்கின்றனர். இதனால் அரசு அங்கீகாரம் பெற்ற நாங்கள் விற்பனையின்றி தவிக்கிறோம். இதுபற்றி வணிக வரித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
அரசுக்கும் வரி கட்டாமல் ஏமாற்றி, பெற்றோரையும் பரிதவிக்க வைக்கும் இதுபோன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் மீது மாவட்ட கல்வித் துறை மட்டுமல்லாது, மாநில வணிக வரித் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர், பல்வேறு வணிகர்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com