பொலிவுறு நகரம் திட்டத்தில் ஓட்டேரி ஏரியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

பொலிவுறு நகரம் திட்டத்தில் வேலூர் ஓட்டேரி ஏரியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.

பொலிவுறு நகரம் திட்டத்தில் வேலூர் ஓட்டேரி ஏரியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்தார்.
விவசாய நிலங்களை வளப்படுத்த ஏரிகளிலிருந்து இலவச வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வேலூர் ஓட்டேரியில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் எடுக்கும் சிறப்பு முகாமல் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்து 210 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது: 
ஓட்டேரி ஏரி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வேலூர் மக்களுக்கு குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் ஆழ்துளைக் கிணறு உள்பட பல்வேறு வழிகளில் வேலூர் மக்களின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டது. இதனால், ஓட்டேரி ஏரியில் நீர்வரத்து குறைந்துடன், நாளடைவில் இந்த ஏரி குடிநீருக்காக பயன்படுத்தப்படாமல் போனது. 
தற்போது ஓட்டேரி ஏரி சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுகிறது. தமிழகத்தில் மாநகராட்சிக்கு உள்பட்ட ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால், முதல்முறையாக ஓட்டேரி ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு 3 அடி ஆழத்தில் 3.5 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் மண் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறதா என வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் செங்கல்சூளை, பானைகள் செய்வதற்கு ஏரியிலிருந்து மண் எடுப்பதற்கு வழிமுறை இருந்தால் அதுகுறித்து ஆலோசித்து அனுமதி வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 4.5 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டேரி, இடையன்சாத்து ஏரி,  பிற ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண் எடுக்கும் பணி முடிவடைந்தால் அவை சுமார் 10 லட்சம் கனமீட்டராக இருக்கும். ஓட்டேரி ஏரிக்கு தண்ணீர் நீர்வரத்து கால்வாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொலிவுறு நகரம் திட்டத்தில் ஓட்டேரி ஏரியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். 
முன்னதாக, இம்முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் தேன்மொழி, பேரிடர் மீட்பு வட்டாட்சியர் பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com