கதாநாயகர்களாக நடித்தவர்கள் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்: தொல்.திருமாவளவன் விமர்சனம்

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடித்த சிலர் தமிழக முதல்வராக ஆசைப்படுகிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடித்த சிலர் தமிழக முதல்வராக ஆசைப்படுகிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
வேலூர் மேற்கு மாவட்ட விசிக சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை நடைபெற்ற அரசியலமைப்புச் சட்ட விழிப்புணர்வு குறித்த பொதுக் கூட்டத்தில்   அவர் பேசியதாவது:
தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடித்த சிலர் முதல்வராக வேண்டும் என ஆசைப்பட்டு கட்சி தொடங்கியுள்ளன.
இவர்கள் மக்களுக்கு என்ன தொண்டு செய்தார்கள். மறியலில் ஈடுபட்டார்களா, மாநாடு நடத்தினார்களா, போஸ்டர் ஒட்டினார்களா, ஆர்ப்பாட்டம் நடத்தினார்களா, சிறைக்குச் சென்றார்களா என்றால் எதுவும் இல்லை.
பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டாத  இவர்கள்,  அவர்களுக்காக எவ்விதமான போராட்டங்களும் நடத்தாத இவர்கள் தற்போது முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு அரசியலில் நுழைந்துள்ளனர். இவர்களுக்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்.
தற்போது தமிழக அரசியலில் குழப்ப நிலை நீடிக்கிறது. இந்திய அரசியலில் நெருக்கடி நிலவுகிறது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டின் வளர்ச்சிக்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றார் அவர்.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் சே. சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் மா.ஜெ. வாசுதேவன் வரவேற்றார். மாநில அமைப்புச் செயலர்கள் கி. கோவேந்தன், நீல.சந்திரகுமார், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் சிவ. செல்லபாண்டியன், மண்டலச் செயலர் ரத்தினநற்குமரன், மாநில பொதுச் செயலர் பிலிப் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். 
குடியாத்தம் தொகுதிச் செயலர் க.பா. மறைமலை, நகரச் செயலர் கு. குமரேசன், ஒன்றியச் செயலர் கிரி, மாவட்டப் பொருளாளர் சி. செல்லையன், மாவட்டத் துணைச் செயலர் கு. விவேக், குருவிகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com