சமூகப் பொருளாதார மாற்றங்கள் குறித்து அடுத்த 8 ஆண்டுகள் ஆய்வு: மாவட்டம் முழுவதும் 6,500 வீடுகள் தேர்வு

மாவட்ட அளவில் தனிநபர், குடியிருப்புகளிடையே ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள் குறித்த ஆய்வு அடுத்த 8 ஆண்டுகளுக்கு

மாவட்ட அளவில் தனிநபர், குடியிருப்புகளிடையே ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள் குறித்த ஆய்வு அடுத்த 8 ஆண்டுகளுக்கு நடத்தப்பட உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்களில் என சுமார் 6,500 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழக புள்ளியியல் துறை சார்பில் தமிழக குடியிருப்புக் குழுவின் தொடர் ஆய்வு மாநிலம் முழுவதும் நடக்க உள்ளது. தேர்வு செய்யப்பட்ட குடியிருப்புகளில் 2 ஆண்டுகள் இடை வெளியில் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு நடத்தப்படும் இந்த ஆய்வின் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள பல்வேறு மதம், சமயம் சார்ந்த மக்களின் வாழ்க்கைத்
தரம், வருமானம், செலவுகள், கல்வித்தரம், அரசு வழங்கும் திட்டங்கள், உதவிகளின் பயன்பாடு, அரசின் மருத்துவ வசதி பயன்பாடு, ஆண்டுதோறும் குடியிருப்பு, தனிநபரிடையே ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள் கணக்கிடப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து, மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு, வாழ்க்கை முறை மாற்றங்கள், அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப அரசின் கொள்கை முடிவுகள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வையொட்டி, மாநிலம் முழுவதும் 682 நகரங்கள், 573 வருவாய் கிராமங்களில் சுமார் 15,090 குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் 26 நகரங்கள், 24 கிராமங்களில் முதல்கட்டமாக 6,500 குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
அந்த வீடுகளுக்கு வினாப்பட்டியல் அளிக்கப்பட்டு அதன்
மூலம் அடிப்படை வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பத் தொழில், வாழ்க்கை ஸ்திரத்தன்மை, குடும்ப வருமானம், செலவுகள், விவசாயம், சமூகத் தொடர்பு, மருத்துவம் ஆகியவற்றை அறிந்து அதன்மூலம் சமூக அளவில் பின்தங்கிய மக்களின் பொருளாதார நிலை குறித்து கணக்கிடப்பட உள்ளன.
 பின்னர், குடியிருப்பின் சமூகப் பிரிவு, வருமான குறியீட்டை அடிப்படையாக கொண்டு 10 முதல் 12 குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டு இடைவெளியில் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக கணினி உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, உடனுக்குடன் சென்னையில் உள்ள எம்ஐடிஎஸ் மையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
இந்தக் குடியிருப்புக் குழு தொடர் ஆய்வு குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 8 ஆண்டுகளுக்கு நடக்க உள்ள இந்த ஆய்வை களப் பணியாளர்கள் சிறப்பாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிக்கவும், இந்த ஆய்வு குறித்து கிராமப்புற மக்களிடம் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். 
கூட்டத்தில், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் சீனிவாசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம், மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன், உதவித் திட்ட அலுவலர் குமார், புள்ளியியல் துறை அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com