நர்சரி கார்டன் உரிமையாளரிடம் ரூ.16.50 லட்சம் மோசடி

திருப்பத்தூரில் பிரபல தனியார் நிறுவனப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் முகவர் வாய்ப்பு பெற்றுத் தருவதாக

திருப்பத்தூரில் பிரபல தனியார் நிறுவனப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் முகவர் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, நர்சரி கார்டன் உரிமையாளரிடம் ரூ. 16.50 லட்சம் மோசடி செய்த பிகார் இளைஞர்கள் 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையைச் சேர்ந்தவர் நவீன்பிரசாத் (32), டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர், அதேபகுதியில் நர்சரி கார்டன் வைத்து தொழில் செய்து வருகிறார். 
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மின்னஞ்சலில் வரப்பெற்ற தகவலில், பிரபல தனியார் நிறுவனத்தின் பொருள்களை விற்பனை செய்திட முகவர் வாய்ப்பு பெற வேண்டுமானால் தொலைபேசியில் அழையுங்கள் எனக் கூறப்பட்டிருந்தது.
அதை நம்பி நவீன்பிரசாத்தும் அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சோனுவரம், ராகுல்ராஜ், குப்தா ஆகிய மூவரும் தங்களதை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், விற்பனை முகவர் வாய்ப்புத் தர தங்களுக்கு ரூ. 10 லட்சத்தை முதலீடாக செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதன்படி, நவீன்பிரசாத்தும் ரூ. 10 லட்சத்தை இணையதளம் மூலமாக அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர்.
சில நாள்களுக்குப் பின்னர், மேலும் ரூ. 5 லட்சம் செலுத்த வேண்டும் என அவர்கள் கூறியதை ஏற்று நவீன்பிரசாத்தை மீண்டும் ரூ. 5 லட்சம் செலுத்தியுள்ளார். 
பின்னர், முகவர்கள் கிடைப்பதில் போட்டி அதிகமாக உள்ளது. மேலும் ரூ. 1.50 லட்சம் செலுத்தும்படி கூறினார்களாம். அந்தப் பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ. 16.50 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். பணம் செலுத்தி பல மாதங்களாகியும் முகவர் வாய்ப்பு தராததுடன், கூறியபடி எந்த பொருள்களையும் அவர்கள் அனுப்பவில்லையாம். 
தொடர்ந்து நவீன்பிரசாத் தனியார் நிறுவன அதிகாரிகள் எனக் கூறி தொலைபேசியில் பேசியவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேலும் பணம் செலுத்தினால்தான் முகவர் வாய்ப்புத் தருவதாக கூறினர்களாம். 
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவீன்பிரசாத், இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், நவீன்பிரசாத்திடம் ரூ. 16.50 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்திருப்பது பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com