ராமர் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்: 1,111 பேர் கைது

தமிழகத்தில் ராமராஜ்ய ரதயாத்திரை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட

தமிழகத்தில் ராமராஜ்ய ரதயாத்திரை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ கட்சியினர் என 1,111 பேர் கைது செய்யப்பட்டனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகத்தில் ராமராஜ்ய ரதயாத்திரை இயக்கப்படுகிறது. இந்த ரத யாத்திரையை தமிழகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் அண்ணா சாலையில் திமுகவினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட திமுக அவைத் தலைவர் 
முகமதுசகி தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். தடையை மீறி மறியலில் ஈடுபட்ட அவர்களை வடக்கு போலீஸார் கைது செய்தனர்.
மேலும், மத்திய மாவட்ட 
திமுக துணை செயலர் ஆர்.பி.ஏழுமலை தலைமையில் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், விஹெச்பியின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் அண்ணா சாலையில் உள்ள பழைய மாநகராட்சி அலுவகம் முன் மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில அமைப்பு செயலர் நீலசந்திரகுமார் தலைமையில் மாவட்டச் செயலர் சன்னிபோஸ், அணைக்கட்டு தொகுதிச் செயலர் கோவேந்தன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தெற்கு போலீஸார் கைது செய்தனர். 
இதேபோல் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ கட்சியினர் வேலூர் மக்கான் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகும்படி போலீஸார் அறிவுறுத்தினர். எனினும், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை வடக்கு போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.  பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 1,111 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம், மார்ச் 20: அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கெளதமன் தலைமையில், ஒன்றியச் செயலாளர் ச.சி.சந்தர், துரை குணசேகரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதைத் தொடர்ந்து அரக்கோணம் நகர திமுக செயலர் ஐ.ராப்சன், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரசாத், நகர நிர்வாகி அன்புலாரன்ஸ் உள்ளிட்ட 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 
எஸ்.ஆர்.கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் கருணாமூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி காஜாமொய்தீன் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
தக்கோலத்தில் நகர திமுக செயலர் நாகராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். நெமிலியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றிய திமுக செயலர் வடிவேலு தலைமையிலான 25 பேர் கைது செய்யப்பட்டனர். ரெட்டிவலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக ஒன்றியச் செயலர் ரவி தலைமையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். காவேரிபாக்கத்தில் ஒன்றியச் செயலாளர் மாணிக்கம் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஓச்சேரியில் திமுக வேலூர் கிழக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆம்பூரில்...
ஆம்பூர் நேதாஜி சாலையில் மனித நேய மக்கள் கட்சியினர் வி.ஆர்.நசீர் அஹமத் தலைமையில் அக்கட்சியினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சந்திரன், ஓம்பிரகாசம் உள்ளிட்டோரும் மறியலில் ஈடுபட்டனர்.  
ஆம்பூர் நகர திமுக செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் தலைமையில் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் நேதாஜி சாலை பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதனூரில்  ஒன்றிய திமுக செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
உமர்ஆபாத் பகுதியில் பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுகவினர் முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆம்பூர் நகரம், கிராமியம் மற்றும் உமர்ஆபாத் போலீஸார் கைது செய்தனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட திமுக நகர அவைத் தலைவர் க. கோ.நெடுஞ்செழியன், எஸ்.எஸ்.பி. பாபு, முன்னாள் நகரச் செயலாளர் மா. விவேகானந்தன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ம.  மனோஜ், கட்சியின் பேச்சாளர்கள் பெ.கோட்டீஸ்வரன், த.பாரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் கு. குமரேசன், தொகுதி செயலர் கா.ப. மறைமலை, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஏ. தாஜுதீன் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நகர திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் பாரூக் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  இதேபோல நகர மதிமுக சார்பில் நகரச் செயலாளர் அ.நாசீர்கான் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு அண்ணாசிலை அருகே நகர திமுக செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதில், மாவட்டத்  துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர அவைத் தலைவர் பொன்ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்  ராஜசேகரன், மாவட்டப் பிரதிநிதி கஜேந்திரன் உள்ளிட்ட 25 பேரை ஆற்காடு நகர  போலீஸார் கைது செய்தனர். 
இதேபோல் மேல்விஷாரம் நகரில்  நகரச் செயலாளர் மன்சூர்பாஷா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் திமுக சார்பில் நகரச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோரும், மனித நேய  மக்கள் கட்சியின் தலைமைப் பேச்சாளர் சனாவுல்லா தலைமையில் 25-க்கும் மேற்பட்டோரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோரும் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை முத்துகடை காந்தி சிலை அருகே நகர திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபேட்டை நகர திமுகவினர் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com