தேர்தல் வந்தால் தமிழக அரசுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்: டிடிவி தினகரன்

தேர்தல் வந்தால் தமிழக அரசுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

தேர்தல் வந்தால் தமிழக அரசுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
குடியாத்தம் தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைப் புறக்கணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, அக்கட்சி சார்பில், சித்தூர்கேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப்  போராட்டத்தில் அவர் பேசியதாவது:
ஏழை, எளிய, அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு ஜெயலலிதா அமல்படுத்திய மக்கள் நலத்  திட்டங்கள் முறையாக சென்று சேரவில்லை. 
மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட ஜெயலலிதா கொண்டு வந்த வளர்ச்சிப் பணிகளில் ஊழல் மலிந்து விட்டது. எந்த முகாந்திரமும் இன்றி தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அந்த 18 தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கல்வி மேம்பாட்டிற்காக காமராஜர் பாடுபட்டார். கடும் பொருளாதார நெருக்கடியிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவர் வழியில் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டங்களால் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற்றது.
அவர்கள் வழியில் ஜெயலலிதாவும் தமிழகத்தில் கல்விப் புரட்சியை மேற்கொண்டார். ஏழை மாணவர்களுக்கும் உயர்கல்வியை அளிக்கும் வகையில் அவர் இலவச சைக்கிள், கல்விப் பொருள்கள், மடிக்கணினி, சீருடைகளை வழங்கினார். 
பெண்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் அமல்படுத்தி செயல்படுத்தினார். ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை சிலர் கொச்சைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.  தற்போது குடியாத்தம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ளது. இடைத் தேர்தல் வந்தாலும், பொதுத் தேர்தல் வந்தாலும் அமமுக தமிழகத்தில்  234 தொகுதிகளிலும் வெற்றிபெறும். 
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விழுப்புரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள், வீடிழந்த ஏழை,  எளிய மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் இளம்பெண்கள் பாசறைச் செயலரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான ஜெயந்தி பத்மநாபன் பேசியதாவது:
குடியாத்தம் தொகுதியில் திட்டமிட்டு வளர்ச்சிப் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
தொகுதியில் அமைய வேண்டிய புறவழிச்சாலை திட்டம் முடக்கப்பட்டுள்ளது. பேர்ணாம்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலர் என்.ஜி. பார்த்திபன், மேற்கு மாவட்டச் செயலர் ஆர். பாலசுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏக்கள் சி.ஞானசேகரன், ம.கலையரசு, முன்னாள் அமைச்சர்கள் கே. பாண்டுரங்கன், ஆர்.வடிவேல், குடியாத்தம் நகரச் செயலர் இ. நித்யானந்தம், ஒன்றியச் செயலர் எம்.கே.பூபாலன், பேர்ணாம்பட்டு நகரச் செயலர் ஏ.எஸ். கண்ணன், ஒன்றியச் செயலர் ஆர். பிரபு,  முன்னாள் மாவட்டச் செயலர் எல்.கே.எம்.பி. வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com