மாவட்டத்தில் 200 ஏக்கரில் தோல் தொழில் குழுமம்

வேலூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மெகா "லெதர் கிளஸ்டர்' (தோல் தொழில் குழுமம்) அமைய உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மெகா "லெதர் கிளஸ்டர்' (தோல் தொழில் குழுமம்) அமைய உள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளன. 
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் டெக்னாலஜி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆம்பூர் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2 நாள் தோல் பொருள்கள், தோல் பதனிடும் ரசாயனப் பொருள்கள் வர்த்தகக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. 
கண்காட்சியைத் தொடங்கி வைத்த பிறகு, தோல் ஏற்றுமதி கவுன்சில் தென்னிந்திய வட்டாரத் தலைவர் மெக்கா இஸ்ரார் அஹமத், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் டெக்னாலஜி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஷபீக் அஹமத், தென்னிந்திய காலணி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் மதார் கலீலூர் ரஹ்மான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் உதவியுடன் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மெகா "லெதர் கிளஸ்டர்' எனப்படும் தோல் தொழில் குழுமம் ஏற்படுத்தப்பட உள்ளது. அதில், புதிய மற்றும் ஏற்கெனவே தோல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அங்கு தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களும் அங்கு தோல் தொழிற்சாலைகளை தொடங்க உள்ளன.  இதன் மூலம் தோல் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.  
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்களுக்கு அமெரிக்கா சுங்க வரியை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் தோல் பொருள்களை வாங்க அமெரிக்கர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். தென்னிந்தியாவில் உள்ள 13 பொது தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 
ரூ. 722 கோடியை மானியமாக வழங்கியுள்ளது. இதில், 30 சதவீதம் தோல் தொழிலதிபர்களின் பங்காகும்.  இந்த மானியத்தில் மாநில அரசின் பங்கையும் எதிர்பார்க்கின்றோம். இதுகுறித்து மாநில அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேவையான உதவிகளை செய்வதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு, 90 சதவீத தோல் கழிவுநீரை சுத்திகரித்து, அதை மீண்டும் தோல் தொழிற்சாலைகள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.10 சதவீத கழிவுநீர் ஆவியாக்கப்படும்.   இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது.
தோல் பதனிடும் போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ரசாயனங்கள்,  புதிய வடிவமைப்புகள், புதிய வண்ணங்கள் ஆகியவை குறித்து தோல் தொழிலதிபர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில்  தோல் பொருள்கள், தோல் பதனிடும் ரசாயன பொருள்கள் வர்த்தகக் கண்காட்சி சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் டெக்னாலஜி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை தொழிலதிபர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். 
ஜிஎஸ்டி உள்ளீட்டு வரியை திரும்பப் பெறுவதற்கு இணையதளத்தில் வழிவகை ஏற்படுத்த கோரிக்கை: தோல் தொழிற்சாலைகள் சார்பில் செலுத்தப்பட்ட உள்ளீட்டு வரியை திரும்பப் பெறுவதற்கு ஜிஎஸ்டி இணையதளத்தில் இதுவரை வழிவகை செய்யப்படவில்லை. இதனால் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் ரூ. 100 கோடிக்கும் மேல் திரும்பப் பெற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தோல் தொழிற்சாலைகளின் நடைமுறை செலவீனத் தொகை அரசிடம் முடங்கிப் போயுள்ளது. அதை திரும்பப் பெற்றால்  தோல் தொழிற்சாலைகளின் நடைமுறை மூலதனமாகப் பயன்படுத்த வாய்ப்பாக இருக்கும். உள்ளீட்டு வரியை திரும்பப் பெறுவதற்கு ஜிஎஸ்டி இணையதளத்தில் வழிவகை செய்ய மத்திய அரசுக்கு தோல் தொழிற்சாலைகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  விரைவில் இணையதளத்தில் உள்ளீட்டு வரியை திரும்பப் பெறுவதற்கான வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். 
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் டெக்னாலஜி முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் ஜான் சுந்தர், செயற்குழு உறுப்பினர்கள் யு. தமீம் அஹமத், சரோஜ் நாராயணன், அஷ்ரப் அலி, புகழேந்தி, வாணியம்பாடி தோல் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் முபீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com