சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வுப் பேரணி

சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வுப் பேரணி வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வுப் பேரணி வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்துப் பங்கேற்றார். 
ஐ.நா சபை அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 13-ஆம் தேதி சர்வதேச பேரிடர் தணிக்கும் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் நிகழ்வுகள், அதற்கான காரணிகள் குறித்தும், பேரிடர் காலங்களில் மக்களைப் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்
படுகிறது. 
இதையொட்டி, வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே விழிப்புணர்வு பேரணியும் தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போலீஸார், பேரிடர் கால மீட்புக் குழுவினர் என 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப் பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியின் மூலம் பேரிடர் காலங்களில் எவ்வாறு மக்களை பாதுகாப்பது, வரும்முன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணி நேதாஜி விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. அங்கு மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. 
 நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் சார்ஆட்சியர் கே.மெகராஜ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாணியம்பாடியில்...
மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலம் சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) காமராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், பேரிடர் மீட்புப் பணிகள் குறித்து பள்ளி மாணவர்கள் கோஷமிட்டுச் சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி பேரூராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது.
தொடர்ந்து, நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற பேரிடர் மேலாண்மை, தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு நிகிழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து,  நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் பேரிடர் வேளாண்மை குறித்தும் தீத் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 வட்டாட்சியர் குமார், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ரமேஷ், ஒன்றியச் செயலாளர்கள் ராஜா, ரமேஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்..
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினரின் பணி ஒத்திகை காட்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் வட்டாட்சியர் ஆர்.பாபு தலைமை வகித்தார். வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கஜேந்திரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 
இதில் அரக்கோணம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பழனி மற்றும் தீயணைப்பு தலைமை அலுவலர் சபாபதி ஆகியோர் தலைமையில் வீரர்கள் பணி ஒத்திகை செய்து காட்டினர். 
அரக்கோணம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம், அரக்கோணம் ராம்கோ தொழிற்சாலை முதுநிலை மனிதவளத்துறை மேலாளர் சீனிவாசன், செல்வம் மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்வம், விவேகானந்தா கல்விக் குழுமச் செயலர் செந்தில்குமார், இணைந்த கைகள் சமூகநல நிறுவன நிர்வாகி ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியிலும், தொடர்ந்து பேரணியிலும் அரக்கோணத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து வந்திருந்த நாட்டு நலப்பணி திட்டம், என்சிசி, இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டையில்..
வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு மற்றும் செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது.  
தொடர்ந்து, வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்ட பேரணியை ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வேணுசேகரன் கொடியசைத்து தொடங்கி 
வைத்தார். 
நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற  பேரணி வாலாஜாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
அதனை தொடர்ந்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. பின்னர் சர்வதேச பேரிடர் குறைப்பு நாள்  மற்றும் நெகிழி  ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com