27 ஆண்டுகால தண்டனை: ஒட்டுமொத்த குடும்பத்துக்குமானது: ராஜீவ் கொலைக் கைதி சாந்தனின் தாய் வேதனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தனின் தாய் தமிழக முதல்வர், பிரதமர்,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தனின் தாய் தமிழக முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சாந்தனுக்கு அளிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகால தண்டனை என்பது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்துக்குமானது என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள்  பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் தமிழக சிறைகளில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற அனுமதியை அடுத்து அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை அண்மையில் ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து இலங்கை யாழ்பாணத்தில் உள்ள சாந்தனின் தாய் தில்லையம்பலம் மகேஷ்வரி (72), தனது மகனை விடுதலை செய்ய பரிந்துரைத்த தமிழக  அரசுக்கு நன்றி தெரிவித்து வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். 
இதுதொடர்பாக அவர், தமிழக  முதல்வர், சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் சாந்தன் உள்பட 7 பேரின் விடுதலைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அயராது உழைத்ததுடன், அவர்கள் விடுதலைக்கான முடிவை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணை  அடிப்படையில் எடுத்திருந்தார். அவரது முடிவை சிரமேற்கொண்டு உழைத்து எனது மகன் விடுதலைக்காக  பரிந்துரைந்த தங்களுக்கு (தமிழக அரசு) எனது குடும்பம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது. வெகு விரைவில் எனது மகனை என்னிடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மேலும், 1991-ஆம் ஆண்டு பிரிந்த எனது மகனை இதுவரை பார்க்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கும்போது நாங்களும் தூக்கு மேடைக்கு ஏறி  இறங்கிக்கொண்டு தான் இருந்தோம். கடந்த 2013-ஆம் ஆண்டு சாந்தனின் தந்தை தில்லையம்பலம்  மாரடைப்பால் இறந்துவிட்டார். தற்போது எனது ஒற்றைக்கண் பார்வையும் வலுவிழந்து விட்டது. 
27 ஆண்டுகால தண்டனை சாந்தனுக்கு மட்டும் அளிக்கப்பட்டதல்ல. எங்களது குடும்பம் ஒவ்வொரு நாளும் நரகத்தில் தான் வாழ்ந்து வருகிறது. தயவு செய்து எனது இறுதிக் காலத்தில் என்னை பராமரிக்கவாவது எனது மகனை  என்னிடம் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதங்களில், "தயவு செய்து ஒரு தாயின் வலியை உணர்ந்து என் குழந்தையை என் இறுதி  காலத்திலாவது என் அருகில் தந்து உதவும்படி தங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com