பெத்லகேம் ரயில்வே மேம்பாலம்: 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறுமா?

ஆம்பூரில் பெத்லகேம் பகுதிக்கு செல்ல ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கால கோரிக்கை எப்பொழுது நிறைவேறும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


ஆம்பூரில் பெத்லகேம் பகுதிக்கு செல்ல ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கால கோரிக்கை எப்பொழுது நிறைவேறும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆம்பூர் நகரையும், நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள பெத்லகேம் பகுதியையும் ரயில்வே இருப்புப் பாதை இரண்டாகப் பிரிக்கிறது. ஆம்பூர் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட 4 வார்டுகள் அங்கு அமைந்துள்ளன. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெத்லகேம் பகுதிக்கு அப்பால் மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன.
மேலும் மின்வாரிய அலுவலகம், துணை மின் நிலையம், 2 தனியார் கல்லூரிகள், சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி படிப்பு மையம், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, நகராட்சி நடுநிலைப் பள்ளி, நிதியுதவி தொடக்கப் பள்ளி, காவலர் குடியிருப்பு, பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், ஆனைமடுகு தடுப்பணை, வழிப்பாட்டுத் தலங்கள் ஆகியவை அமைந்துள்ளன.
இப்பகுதிக்குச் செல்ல பேருந்து நிலையம் அருகேயுள்ள குறுகலான ரயில்வே குகைவழிப் பாதையை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.
நான்கு சக்கர வாகனங்கள் செல்ல ஆம்பூர் புறவழிச் சாலை-தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகேயுள்ள சற்று உயரமான ரயில்வே குகைவழிப் பாதையைப் பயன்படுத்துகின்றனர்.
இரு குகைவழிப் பாதைகளும் தரை மட்டத்திலிருந்து மிகவும் தாழ்வாக இருப்பதால் கால்வாய் கழிவுநீர் எந்நேரமும் அந்த இரு குகைவழிப் பாதையிலும் தேங்கியிருக்கும். மேலும் மழைக் காலங்களில் சுமார் 5 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கிவிடும்.
அந்த நேரங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ரயில்வே இருப்புப் பாதைக்கு அப்பால் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற இவ்வழியைத் தான் பயன்படுத்துவார்கள்.
கால்வாய் கழிவுநீர் எப்பொழுதும் குகைவழிப் பாதையில் தேங்கியிருப்பதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்தாமல் நேரடியாக ரயில்வே இருப்புப் பாதையைக் கடந்து செல்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு சரக்கு ரயில் ஏதேனும் நின்றிருந்தாலும் ரயிலுக்கு அடியிலும் பலர் நுழைந்து செல்கின்றனர். அதனால் விபத்தில் சிக்கி சிலர் இறப்பதும் உண்டு. மேலும், இரு குகைவழிப் பாதைகளிலும் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் பெண்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர்.
இது தொடர்பாக மாநில அரசுக்கும் பலமுறை ஆம்பூர் மக்கள் கோரிக்கை மனு அனுப்பினர். ஆம்பூர் தொகுதி எம்எல்ஏவாக அ. அஸ்லம் பாஷா இருந்தபோது ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துப் பேசினார். மேலும், தமிழக முதல்வரிடமும் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ரூ. 30 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமென பட்ஜெட் கூட்டத் தொடரில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013 -ல் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் பிறகு முதல்கட்டமாக ஆரம்ப கட்டப் பணிகளுக்காகவும், நிலமெடுப்பதற்காகவும் ரூ. 7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை.
30 ஆண்டு கால கோரிக்கை எப்போது நிறைவேறுமென பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com