வழிபாட்டுத் தலத்துக்கு சுற்றுச்சுவர்  அமைக்க மக்கள் எதிர்ப்பு: மறியல் முயற்சி - போலீஸார் குவிப்பு

வேலூர் அருகே வழிபாட்டுத் தலத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில்

வேலூர் அருகே வழிபாட்டுத் தலத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
வேலூர் கொணவட்டம் பாரதியார் தெருவில் ஒரு வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. அதைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப அதன் நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு பொது வழியை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்ட முயற்சிப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், திட்டமிட்டபடி வியாழக்கிழமை சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதையறிந்த இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த சட்டஒழுங்கு ஏடிஎஸ்பி அதிவீரபாண்டியன், கலால் ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீஸார் மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனிடையே, வட்டாட்சியர் ரமேஷ், வருவாய்த் துறையினர் அப்பகுதிக்கு வந்து வழிபாட்டுத் தல சுற்றுச்சுவர் அமைக்கும் இடத்தை அளவீடு செய்தனர். மேலும், ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எஸ்.பி.  பிரவேஷ்குமார் ஆகியோருக்கும் தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து, ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, பொதுமக்கள் மறியல் முயற்சியைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com