பச்சிளம் சிசுக்கள் கவலைக்கிடம்: கருத்தரிப்பு மையம் மீது ஆட்சியரிடம் புகார்

வேலூரில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் சிசுக்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதை அடுத்து,

வேலூரில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் சிசுக்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதை அடுத்து, தனியார் கருத்தரிப்பு மையம் மீது மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும், அவர்கள் அந்த கருத்தரிப்பு மையம் முன்பு தர்னாவிலும் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த பாலாஜியின் மனைவி ரெடிமோனிஷா (29). இவர் வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்து கொண்டுள்ளார். இவருக்கு கடந்த 19-ஆம் தேதி இரவு சுகப்பிரசவம் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
எனினும், சில மணிநேரத்திலேயே குழந்தைகளின் எடை குறைவாக இருப்பதாகவும், மூச்சுத் திறணல் ஏற்படக்கூடும் எனவும் கூறிய மருத்துவர்கள், தங்களிடம் அதற்குரிய வசதிகள் இல்லை எனக்கூறி, காஞ்சிபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனராம். ஆனால், பச்சிளம் குழந்தைகளை போதிய ஏற்பாடுகளுடன் அனுப்பாததால் அந்தக் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து, ரெடிமோனிஷாவின் பெற்றோர், கணவர், உறவினர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையின் சிகிச்சை குறைபாடு காரணமாகவே பச்சிளம் குழந்தைகளுக்கு கவலைக்கிடமான நிலை ஏற்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 
மேலும், மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி வேனில் ஏற்றினர். பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றெடுக்க வேலூர் சத்துவாச்சாரி தனியார் மருத்துவமனை நிர்வாகம் இதுவரை ரூ. 7.5 லட்சம் பணம் வசூலித்துவிட்டது. எனினும், முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இதனால், பச்சிளம் குழந்தைகளுக்கு கவலைக்கிடமான நிலை ஏற்பட்டுள்ளது. 
தொடர்ந்து குழந்தைகளைப் பாதுகாக்க நாளொன்றுக்கு ரூ. 60 ஆயிரம் தொகை செலுத்த வேண்டும் என காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனை கூறியது. 
அவ்வளவு தொகை செலுத்த முடியாத நிலையில், தற்போது இரு குழந்தைகளும் எழும்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. முறையான சிகிச்சை அளிக்காத வேலூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
இப்புகார் தொடர்பாக வட்டாட்சியர் ரமேஷ், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com