வட மாநில வியாபாரிடம் ரூ. 7.70 லட்சம் கொள்ளை

நாட்டறம்பள்ளி அருகே காரில் லிப்ட் கேட்டு வந்த வட மாநில வியாபாரியிடம் 7.70 லட்சம் ரூபாய் பணத்தை 

நாட்டறம்பள்ளி அருகே காரில் லிப்ட் கேட்டு வந்த வட மாநில வியாபாரியிடம் 7.70 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 மகாராஷ்டிர மாநிலம்,  குஹை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் கணபதி சிங் (40). வியாபாரியான இவர், தனது உறவினர்கள் சத்தாராம்சிங்(40), போபட்அல்சர் (33), ரமேஷ் (53) மற்றும் பிமன்படேல் (40) ஆகியோருடன் மகாராஷ்டிரத்தில் இருந்து கடந்த 22-ஆம் தேதி காரில் வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் தங்ககோயிலுக்கு சுற்றுலா சென்றனர்.
 பின்னர், திங்கள்கிழமை அதிகாலை போபட்அல்சர், ரமேஷ், பீமன்படேல் ஆகிய 3 பேரும் அவர்கள் வந்திருந்த காரிலேயே மீண்டும் மகாராஷ்டிரம் நோக்கி காரில் புறப்பட்டனர். ராஜ்குமார்கணபதிசிங், சத்தாராம் சிங் ஆகிய 2 பேரும் திருப்பதிக்குச் சென்றுவிட்டு திரும்பி வருவதாகக் கூறிவிட்டு ஸ்ரீபுரத்திலேயே தங்கிவிட்டனர். இந்நிலையில், காலை 9 மணியளவில் இருவரும் திருப்பதிக்குச் செல்லாமல், நிலம் வாங்க வைத்திருந்த 7.70 லட்சம் ரூபாய் பணத்துடன் அவ்வழியாக பெங்களூரு சென்று கொண்டிருந்த காரில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளனர். காரில் ஓட்டுநரும், உடன் வேறொரு நபரும் இருந்துள்ளனர்.
 வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் அருகே சென்றபோது, கார் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஏற்கெனவே அங்கு வேறொரு காரிலிருந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 4 பேர் வந்து காரிலிருந்த ராஜ்குமார்கணபதிசிங், சத்தாராம்சிங் ஆகிய 2 பேரையும் தாக்கியுள்ளனர். பின்னர், காரிலிருந்து கீழே இறக்கிவிட்டு, அவர்கள் கொண்டு வந்த பணத்துடன் 2 கார்களில் 6 பேரும் தப்பித்துச் சென்றனர்.
 இதுகுறித்து ராஜ்குமார் கணபதிசிங், சத்தாரம் சிங் ஆகியோர் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸார் இருவரையும் அழைத்துச் சென்று, வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி சுங்கச்சாவடியில் பதிவான வாகனங்களை வைத்து  விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ராஜ்குமார்கணபதிசிங், சத்தாராம் சிங் உடன் வந்திருந்த போபட்அல்சர், ரமேஷ், பிமன்படேல் ஆகிய 3 பேரையும் போலீஸார் தொடர்பு கொண்டு அவர்களையும் நாட்டறம்பள்ளி காவல் நிலைத்துக்கு வரவழைத்து, தனித்தனியே விசாரணை நடத்தினர்.
 மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com