போரில் இலங்கை ராணுவத்துக்கு உதவியது இந்தியாதான்: முன்னாள் அமைச்சர் வளர்மதி

இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரின்போது அந்நாட்டு ராணுவத்துக்கு பயிற்சியளித்தது இந்தியா

இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரின்போது அந்நாட்டு ராணுவத்துக்கு பயிற்சியளித்தது இந்தியா தான். இந்தப் பயிற்சி காங்கிரஸ், திமுக ஆட்சிக் காலத்தில் தான் அளிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி 
தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். 
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி  வரவேற்றார். 
கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி பேசியதாவது:
 இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரின்போது, அந்நாட்டு ராணுவத்துக்கு இந்தியா தான் பயிற்சியளித்தது. அதனால்தான் இலங்கை அரசால் அந்த போரில் வெற்றி பெற முடிந்தது. இந்த பயிற்சி மன்மோகன்சிங், கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் அளிக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். அண்மையில், தில்லியில் பேட்டியளித்த ராஜபட்ச இந்திய அரசு உதவியுடன்தான் இலங்கை போரில் வெற்றி பெற்றதாகக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களைக் கொல்ல காங்கிரஸ், திமுக உதவியதற்கு ராஜபட்ச கூறியதே சான்றாகும். 
 ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுதலை செய்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 
ஆனால், திருநாவுக்கரசர் எதிராக கருத்து தெரிவிக்கிறார். அவர்கள் இருவரும் ஒரே மேடையில் கூட்டாக கருத்து தெரிவிக்க வேண்டும். 
ஜெயலலிதா இறந்ததும் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் ஊர்ஊராகச் சென்று கூறிவந்தார். அதிமுக உடைந்துவிடும் எனவும் நினைத்தனர். ஆனால், அது பலிக்கவில்லை. இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க
முடியாது. "இந்த இயக்கம் எனக்குப் பின்னரும் நூறு ஆண்டுகள் இருக்கும்' என ஜெயலலிதா கூறியிருந்தார். அதேபோல் இந்த இயக்கம் நிமிர்ந்து நிற்கிறது. 
1996 தேர்தலில் அதிமுக தோற்றபோது ஒரு குடும்பத்தைக் காட்டி இந்தக் குடும்பத்தால்தான் தோற்றோம் என ஜெயலலிதா கூறினார். இப்போது அவர்களுடன் இருப்பவர்கள் பணத்துக்காகவும், பதவிக்காகவும் மட்டுமே இருக்கின்றனர். 
அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஊர்ஊராகச் சுற்றி, ஊழல் குறித்துப் பேசுகிறார். ஊழல் பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியுமில்லை என்றார் அவர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வி.எஸ்.விஜய், முகமது ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com